வளர்ப்பு யானைகள் பராமரிப்பு சட்ட விதிகள் படி, கோவில் யானைகள் பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என இந்து சமய அறநிலைய துறைக்கும், வனத்துறைக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் உள்ள ஆண்டாள், லட்சுமி என்ற இரு யானைகளையும் பராமரிப்பது தொடர்பாகவும், பாகன்கள் நியமிப்பது தொடர்பாகவும், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நீலகிரி மாவட்டம், தெப்பக்காடு வனப்பகுதியில், யானைகள் புத்துணர்வு முகாமில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் யானையை பாகன் அடிப்பது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது குறித்து நீதிபதிகள் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து, தமிழகத்தில் தனியார் மற்றும் கோயில்களில் வளர்க்கப்படும் யானைகள் முறையாக பராமரிக்கப்படும் வகையில் புதிய கொள்கை மற்றும் விதிமுறைகளை வகுப்பது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன், வளர்ப்பு யானைகள் பராமரிப்பு சட்ட விதிகளை கோவில் நிர்வாகங்கள் முறையாக பின்பற்றுகிறதா என அறநிலைய துறை அறிக்கை அளிக்க உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
தமிழக வனத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கோயில்களில் வளர்க்கப்படும் யானைகள் முறையாக பராமரிக்கப்படும் வகையில் புதிய கொள்கை வகுப்பது தொடர்பாக யானைகள் நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, அறநிலைய துறை அதிகாரிகளுடன் கடந்த 23ம் தேதி ஆலோசனை நடத்தப்பட்டு, அரசுக்கு பரிந்துரைகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதுசம்பந்தமான அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
மாநில அரசு தேர்தல் ஜுரத்தில் இருப்பதாக கூறி, வழக்கு விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், யானைகள் உள்ளிட்ட விலங்குகளை துன்புறுத்துவதை அனுமதிக்க முடியாது எனவும், அவற்றை முறையாக நடத்த வேண்டும் என அறிவுறுத்தினர். யானைகள் மனிதாபிமான, கண்ணியமான முறையில் நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். துன்புறுத்தக் கூடாது எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
யானைகள் புத்திசாலியான விலங்கு எனவும், அவற்றின் உள்ளுணர்வு மனிதர்களுக்கு கிடையாது எனவும் தெரிவித்த நீதிபதிகள், தனியார் மற்றும் கோவில்களில் உள்ள வளர்ப்பு யானைகளை பராமரிப்பது தொடர்பான திட்டவட்டமான கொள்கையை வகுத்து தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
வளர்ப்பு யானைகள் பராமரிப்பு சட்ட விதிகள் படி, கோவில் யானைகள் பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்தும், இந்த விதிகள் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்தும் இந்து சமய அறநிலைய துறையும், வனத்துறையும் இணைந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.