தமிழ்நாட்டில் எஞ்சியுள்ள சங்ககால கோட்டைகளில் ஒன்றாகக் கருதப்படும் புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக்கோட்டையில் சுமார் 20 உயரத்தில் அதே அளவு அகலத்தில் 1.6 கி.மீ சுற்றளவு கொண்ட பழமையான கோட்டை அகழியுடன் உள்ளது. கோட்டையின் மேலே பாதுகாவலர்கள் நிற்கும் கொத்தலமும் பல இடங்களும் காணப்படுகிறது. கோட்டையின நுழைவாயில்களில் முனீஸ்வரன், காளி, கருப்பர் போன்ற காவல் தெய்வ வழிபாடுகள் இன்றளவும் உள்ளது.
இந்த சங்ககால கோட்டைக்குள் உள்ள நீர்வாவி குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட தமிழி கல்வெட்டில் 'ஆடு, மாடு பிடிக்க வந்தவர்களை எதிர்த்து போராடி மடிந்த போர் வீரனின் பெயர்' எழுதப்பட்டுள்ளது. மேலும் கோட்டைக்குள் பழமையான கருப்பு, சிவப்பு பானை ஓடுகள் மற்றும் கோட்டைக்கு வெளியே ஆயுத தொழிற்சாலை செயல்பட்டதற்கான சென்னாக்குழிகள், இரும்பு உருக்கு கழிவுகளும் காணப்படுவதால், இதனை அகழாய்வு செய்ய புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கறிஞர் கணபதிசுப்பிரமணியன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த நிலையில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் பொற்பனைக்கோட்டையை ஆய்வு செய்ய கேட்டதால் மத்திய தொல்லியல் துறை திறந்தநிலை பல்கலைக்கழக பேராசிரியர் இனியனை இயக்குநராக கொண்டு அகழாய்வு செய்ய அனுமதி அளித்துள்ளது.
அகழாய்வுக்கு முன்பே அகழாய்வு செய்ய வேண்டிய இடங்களை ஆய்வுக்குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து இன்று (25/07/2021) திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை சார்பில் மின்காந்த அலை கதிர்வீச்சு மூலம் ஏற்கனவே தேர்வு செய்து வைத்துள்ள குறிப்பிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவு சில தினங்களில் கிடைத்தவுடன் அகழாய்வுப் பணிகள் தொடங்க உள்ளது. மேலும் அகழாய்வுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் உள்பட கிராம மக்களின் முழு ஒத்துழைப்பும் கிடைத்துள்ளது.
இந்த நிலையில், புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகம் கரு.ராஜேந்திரன், ஆ.மணிகண்டன், கஸ்தூரிரங்கன், ராஜாங்கம் உள்ளிட்ட குழுவினர், மேலும் மேற்பரப்பாய்வு செய்த போது கோட்டையின் வடக்கு வாசல் பகுதியில் கொத்தலம் அருகே ஒரு பெரிய செங்கல்லில் ஒரு பூனையின் கால் தடம் பதிவாகி இருந்ததைக் கண்டறிந்தனர். மேலும் பழங்கால பெண்கள் விளையாடப் பயன்படுத்திய வட்ட வடிவ சுடுமண் சில கண்டறியப்பட்டது. "அகழாய்வு செய்யும் போது இதேபோல பல அபூர்வமான பொருட்கள் கிடைக்கும். மேலும் ஆயுதங்களும் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. கோட்டைக்குள்ளேயே பழைய கட்டுமானங்களும் வெளிப்படலாம்" என்றார் ஆசிரியர் மங்கனூர் ஆ.மணிகண்டன்.
விரைவில் தமிழர்களின் வரலாற்று சான்றுகளோடு பொற்பனைக்கோட்டை வெளி வரப் போகிறது.