Skip to main content

"தமிழகத்தில் மின் கட்டணம் உயர்கிறது"- அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி! 

Published on 18/07/2022 | Edited on 18/07/2022

 

"Electricity charges are rising in Tamil Nadu"- Minister Senthil Balaji interview!

 

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, "தமிழகத்தில் பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் மின் கட்டணங்கள் உயர்கின்றன. 42% வீடு மற்றும் குடிசைக்கான மொத்த மின் கட்டணத்தில் மாற்றமில்லை. வீட்டு மின்இணைப்புக்கான 100 யூனிட் இலவசத்திலும் மாற்றம் இல்லை. விசைத்தறிக்கு 750 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவது தொடரும். நுகர்வோர் 100 யூனிட் இலவச மின்சாரத்தை வேண்டாம் என்று எழுதிக் கொடுக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். 

 

200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூபாய் 27.50 கூடுதலாகக் கட்டும் வகையில் மின் கட்டணம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாதம் 301- 400 யூனிட் பயன்படுத்துவோருக்கு இரண்டு மாதங்களுக்கு ரூபாய் 147.50 உயர்த்தப்படும். 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு ரூபாய் 298.50 கூடுதல் மின் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. 

 

கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரத்துறையில் ரூபாய் 12,647 கோடியாக கடன் உயர்ந்துள்ளது. மூன்றில் இரு பங்கு தனியாரிடம் நிலக்கரி வாங்க வேண்டியது உள்ளது. மின் கட்டணங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் நிபந்தனைகளை ஏற்கும் நிலைக்கு தமிழக மின்வாரியம் தள்ளப்பட்டுள்ளது. மூன்றில் இரு பங்கு தனியாரிடம் நிலக்கரி வாங்க வேண்டியது உள்ளது. ஒரு வீட்டுக்கு ஒரு மின் இணைப்பு திட்டம் கொண்டு வரத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 

 

ரயில்வே மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மின் கட்டணம் யூனிட்டுகளுக்கு 65 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. பிற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது, தமிழகத்தில் மின் கட்டணம் குறைவாகவே உள்ளது. மின் கட்டண உயர்வு குறித்து மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் கருத்துக் கேட்பு நடைமுறைப்படுத்தப்படும்" எனத் தெரிவித்தார். 

 

சார்ந்த செய்திகள்