Skip to main content

சாலை விபத்தில் பலியான மின்சார வாரிய ஊழியர்!

Published on 24/01/2022 | Edited on 24/01/2022

 

Electricity Board employee passed away in road accident

 

சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை மையப் பகுதியில் உள்ளது உளுந்தூர்பேட்டை. அங்கிருந்து விருத்தாசலம் செல்லும் நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணி சமீபகாலமாக நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையின் குறுக்கே உள்ள பாலங்களை விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலையில் புதிதாக வாகனங்களில் பயணம் செய்வோர் பெரும் விபத்துக்குள்ளாகும் சம்பவம் அடிக்கடி நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் திருத்தேரி பகுதியைச் சேர்ந்தவர் பிரகாசம் என்பவரது மகன் தாஸ். இவர் மின்சார வாரியத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

 

இவர் நேற்று செங்கல்பட்டிலிருந்து விருத்தாசலத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். உளுந்தூர்பேட்டை விருத்தாசலம் சாலையில் அவர் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது சாலை அகலப்படுத்தும் பணிக்காக போடப்பட்டிருந்த தரைப்பாலத்தின் பள்ளத்தில் தனது இருசக்கர வாகனத்தோடு நிலைதடுமாறி விழுந்துள்ளார். அங்கு பாலம் கட்டுமானப் பணிக்காக அரைகுறையாக கட்டப்பட்டு நீண்டு கொண்டிருந்த கம்பிகள் அவரது உடலில் பல்வேறு இடங்களில் குத்தி உடலினுள்ளே சென்றுள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே தாஸ் துடிதுடித்து இறந்தார். அந்த சாலை வழியே வாகனத்தில் சென்றவர்கள் இந்த விபத்தை பார்த்து விட்டு உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கூறியுள்ளனர்.

 

இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் அருட்செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். விபத்தில் சிக்கி உயிரிழந்த தாசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாலம் கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தில் போதிய விழிப்புணர்வு பலகைகள் விபத்து தடுப்பு ஒளிரும் ஸ்டிக்கர்கள் உட்பட விபத்து ஏற்படாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் முறையாக எடுக்காததால் மின்சார வாரிய ஊழியர் விபத்தில் சிக்கி உயிரிழக்க நேர்ந்துள்ளது. 

 


 

சார்ந்த செய்திகள்