சிவகாசி என்ற பெயர் அமைந்ததற்கான காரணம், அங்குள்ள பிரசித்திபெற்ற அருள்மிகு விஸ்வநாதசுவாமி திருக்கோயில்தான். சிவன் காசியில் இருந்து எழுந்தருளியதாலேயே, சிவகாசி எனப் பெயர் வந்தது.
தொழிலில் மட்டுமல்ல, ஆன்மிக அர்ப்பணிப்பிலும் சிறந்து விளங்கும் சிவகாசியில், தற்போது ஆடித்தபசு திருவிழா நடந்து வருகிறது. இன்று (8-8-2022) 9-ஆம் நாள் திருவிழாவாகும். மண்டகப்படிதாரரான வடநாட்டவர் நிறுவனமான தர்கர்ஜி சிவா டிரேடர்ஸ் சார்பில் அபிஷேகமும், சட்டத் தேரோட்டமும் நடந்தது. சிவகாசி ரதவீதிகளில் அன்ன வாகனத்தில் அம்பாள் தேர் வலம் வந்தபோது, தெற்கு ரதவீதியில் நகரமுடியாமல் நின்றுவிட்டது. காரணம், சாலையில் குறுக்கிடும் கேபிளைக் கழற்றிவிட்டு, அந்த ரதவீதியில் சட்டத்தேர் செல்வதற்கு வசதி பண்ணித்தர மின்வாரிய ஊழியர்கள் வராததுதான்.
மின்சார சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யும் நாளான 8-ஆம் தேதி, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், சாலையில் குறுக்கிடும் கேபிளைக் கழற்றிவிட வரவில்லை. அதனால், சட்டத்தேர் சாலையின் நடுவே நின்று போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு, மக்கள் அவதிப்பட நேரிட்டது. சூழ்நிலையைத் தாமதமாக உணர்ந்து, மின் ஊழியர்களை வரவழைத்து, கேபிளைக் கழற்றிவிடச் செய்து, சட்டத்தேரை அந்த இடத்திலிருந்து நகர்த்தி கோவிலுக்கு கொண்டுபோய்ச் சேர்த்தனர்.
‘இன்றைக்கு மின் ஊழியர்கள் வேலை நிறுத்தம் என்பதை அறிந்தும் சட்டத்தேரை ஏன் இழுத்தார்கள்? முதலிலேயே மின்சாரத்துறையிடம் முறைப்படி தெரிவித்திருக்க வேண்டுமல்லவா? சட்டத்தேரை இழுப்பதற்கு முன்பே மின் ஊழியர் ஒருவரைத் தயாராக வைத்திருக்கவில்லையே? வீதிகளில் வலம் வரும் கோவில் தேர்களால் அங்கங்கே அசம்பாவிதம் ஏற்பட்டு வருவதைக் கவனத்தில்கொண்டு, மின் இணைப்பைத் தேரை இழுப்பதற்கு முன்பே துண்டிக்காதது ஏன்?’ எனச் சிவகாசி பொதுமக்களின் கேள்விகள் வரிசைகட்டி நிற்க, விஸ்வநாதசுவாமி கோவில் செயல் அலுவலர் சத்தியசீலனைத் தொடர்புகொண்டோம்.
அவரது கைப்பேசி எண் தொடர்ந்து ஸ்விட்ஸ்-ஆப் நிலையிலேயே இருந்தது. அதனால், கோவில் அலுவலகத்தைத் தொடர்புகொண்டோம். “மின்வாரிய அலுவலர்களான உதவி செயற்பொறியாளருக்கும், உதவிப் பொறியாளருக்கும் முறைப்படி கடிதம் மூலம் தெரிவித்திருந்தோம். திடீரென்று பணிநிறுத்தம் அறிவித்துவிட்டதால் மின் ஊழியர்களை அனுப்பமுடியவில்லை என்று காரணம் சொன்னார்கள்.” என்றனர். ‘மின் ஊழியர்கள் வராத நிலையில் தேரை இழுத்தது தவறல்லவா?’ என்ற நமது கேள்விக்கு அவர்களிடம் பதிலில்லை.