தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இரண்டு வருடங்கள் நிறைவடைந்த நிலையிலும், இந்த விடுபட்ட மாவட்டங்களில் இதுவரை உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை. எனவே இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழங்குத் தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் வரும் 15ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்நிலையில் தமிழக தேர்தல் ஆணையம் விடுபட்ட மாவட்டங்களில் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. முதற்கட்டமாக நேற்று முன்தினம் வாக்காளர் பட்டியல் வெளியானது. இந்த குறிப்பிட்ட 9 மாவட்டங்களில் 78 லட்சம் பேர் வாக்காளர்களாக உள்ளனர். இந்நிலையில் விரைவில் தேர்தல் தேதி வெளியாக உள்ள நிலையில், தமிழக தேர்தல் ஆணையம் தேர்தல் நேரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, வழக்கமாகத் தேர்தல் நடைபெறும் காலை 7 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலான நேரம், தற்போது காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மாற்றப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிக்கை வாயிலாகத் தெரிவித்துள்ளது.