Published on 16/02/2022 | Edited on 16/02/2022
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தற்போது தமிழகம் உள்ளது. இந்நிலையில் வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்வதைத் தடுக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வாகன சோதனைகள் செய்யப்படுவதோடு, பறக்கும் படையினரையும் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும், வாகன சோதனை மற்றும் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனை மூலம் கடந்த மாதம் 28ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை 6 கோடியே 89 லட்சம் ரூபாய் பணமும், 1 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 1 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இப்படி மொத்தம் 9 கோடியே 28 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.