ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக வரும் 6ஆம் தேதி ஆலோசனை நடத்த அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து, எஞ்சிய 27 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சிக்கான தேர்தல் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. எஞ்சியுள்ள 9 மாவட்டங்கள் மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கு விரைந்து தேர்தல் நடத்தப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துவந்த நிலையில், தற்போது வார்டு மறுவரையரை உள்ளிட்ட ஆயத்த பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டுவருகிறது. இந்த நிலையில், எஞ்சிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்திருக்கிறது. இந்த ஆலோசனையானது வரும் திங்கட்கிழமை பிற்பகல் 12 மணிக்கு அரும்பாக்கத்தில் உள்ள மாநில தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.