நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ராசிபுரம், பாப்பிநாயக்கன்பட்டி உள்ளிட்ட இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது; "நாமக்கல் மாவட்டம் ராசியான மாவட்டம். பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாகக் கொண்டாட ரூபாய் 2,500 வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசு டோக்கனை அ.தி.மு.க.வினர் வழங்குவதாக ஸ்டாலின் கூறியது பொய் குற்றச்சாட்டு. ஏழை, எளிய மக்களை காக்கும் தமிழக அரசுக்கு பொதுமக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். மக்கள் கொடுத்த பதவிதான் முதல்வர் பதவி; நாற்காலி மேல் ஆசைப்படுபவன் நான் அல்ல" என்றார்.
அதைத் தொடர்ந்து, வீடு வீடாக சென்று மக்களைச் சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கியும், அ.தி.மு.க அரசின் சாதனைகளை விளக்கிக் கூறியும் முதல்வர் தேர்தல் பிரச்சாரம் செய்தார். முதலைப்பட்டியில் பிரச்சாரம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தங்கமணியுடன் பாப்பிநாயக்கன்பட்டி ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் விவேக் என்பவரின் வீட்டில் டீ அருந்தினார். அவர்களுடன் சிறிது நேரம் பேசியவர், அதன் பிறகு மீண்டும் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.