தமிழக அரசின் நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் வைத்திருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி அதனை நேற்று தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பினார். இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர். தமிழக அரசும் அனைத்து கட்சிகளுடன் நாளை ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. நேற்று மக்களவையில் பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு, ஆளுநர் தமிழக மக்களின் பிரதிநிதிகளை அவமானப்படுத்துகிறார் என்று கடுமையான முறையில் பேசினார்.
மாநிலங்களவையிலும் திமுக உறுப்பினர் திருச்சி சிவா இன்று இதுகுறித்து பேசக்கோரி தனிநபர் மசோதா கொண்டு வந்தார். ஆனால் அதை சபாநாயகர் எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டார். இந்நிலையில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் கல்வியை மாநிலப்பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று கூறி தனிநபர் மசோதா தாக்கல் செய்துள்ளார். இது அவையில் விவாதிக்கப்படுமா என்று இன்னும் சில தினங்களில் தெரியவரும். மேலும் நீட் விவகாரத்தை முன்னெடுத்து இன்று காலை திமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்கள்.