திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் திருப்பத்தூர் நகரத்தில் புத்தகக் கண்காட்சியும், இலக்கியத் திருவிழாவும் வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு அரசு பள்ளி ஆசிரியர்களும் தங்களது வகுப்பு மாணவ மாணவிகளை புத்தக விற்பனை கண்காட்சிக்கு அழைத்து வரவேண்டும். ஒவ்வொரு மாணவரும் தலா 100 ரூபாய்க்காவது புத்தகம் வாங்க வைக்க வேண்டும் என மாவட்ட கல்வித்துறை சார்பில் வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு ஆசிரியர்கள் கண்டிப்பாக ஆயிரம் ரூபாய்க்கு புத்தகம் வாங்கியே ஆகவேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
இது குறித்து ஆசிரியர்களுக்கு வட்டார கல்வி அலுவலர்கள் அனுப்பிய வாட்ஸாப் செய்தியை நமக்கு அனுப்பினர். அதில், “அனைத்து வகை தலைமை ஆசிரியர்களுக்கும், உதவி ஆசிரியர்களுக்கும் வணக்கம். திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியை அனைத்து ஆசிரியர்களும் பார்வையிட்டு, ஒவ்வொருவரும் குறைந்தது ரூபாய் ஆயிரத்திற்கு புத்தகங்களை வாங்கி அதனுடைய ரசீதுகளை வாட்ஸாப் குரூப்பில் அனுப்ப வேண்டும். மாணவர்கள் வாங்கிய புத்தகங்கள் இந்த கணக்கில் சேராது. கண்டிப்பாக ஒவ்வொரு ஆசிரியரும் ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கு மேலும் புத்தகங்களை வாங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் முதன்மை கல்வி அலுவலர் மூலமாக ஆணையிட்டுள்ளார்கள்.
நாளை 3:00 மணிக்கு நடைபெறும் இணையவழிக் கூட்டத்தில் நம்முடைய ஒன்றியத்தில் எத்தனை ஆசிரியர்கள் எவ்வளவு தொகைக்கு புத்தகங்களை வாங்கினார்கள் என்ற விவரத்தினை அளிக்கவேண்டி உள்ளதால் ஆசிரியர்கள் வாங்கிய புத்தகங்களுக்கான ரசீதுகளை வாட்ஸாப் குரூப்பில் பதிவிட வேண்டும்.
இதன் மீது தனி கவனம் செலுத்த வேண்டும் என ஒவ்வொரு வட்டார கல்வி அலுவலர்களுக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் தகவல் அனுப்பியுள்ளனர். இது ஆசிரியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இப்படியொரு உத்தரவுக்கு காரணமான மாவட்ட ஆட்சித்தலைவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது ஆசிரியர்களைக் கொண்டாடச் செய்துள்ளது.