துதிபாடுவதை நிறுத்துங்கள் புகழேந்தி!- பெங்களூரு முன்னாள் மா.செ. யுவராஜ்
அதிமுக-வின் இரு அணிகளும் இணைந்ததை கர்நாடகாவில் உள்ள அதிமுகவினர் கொண்டாடும் பொழுது, அதிமுக கர்நாடக மாநில பொதுச்செயலாளர் புகழேந்தி யார் பின்னாலோ நின்று துதிபாடிக்கொண்டிருப்பதாக பெங்களூரு மாவட்ட அதிமுக முன்னாள் செயலாளர் யுவராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மறைந்த நமது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அதிமுக கர்நாடகத்தில் வளர பொதுச்செயலாளர் பதவியை உங்களுக்கு வழங்கினார். ஆனால், கர்நாடகத்தில் அதிமுக வளரவிடாமல் அழித்துவிட்டீர்கள். ஜெயலலிதா மறைவிற்கு முன்பு வரை தமிழகம் செல்லாத நீங்கள், இப்போது தமிழகம் சென்று யார் பின்னாலோ நின்றுகொண்டு அறைகூவல் விடுகிறீர்கள். உங்களைப் பற்றி நீங்களே பெருமையாக பேசிக் கொள்கிறீர்கள். உங்களது அருமை பெருமைகளை கர்நாடக கழகத்தில் உள்ளவர்கள் நன்கு அறிவார்கள். கர்நாடகத்தில் கன்னடர்கள் உங்களை தாக்கியதாக குற்றம் சாட்டினீர்கள். அது ஒரு நாடகம் என்று ஜெயலலிதா அறிவார். கர்நாடகத்தில் தமிழர்களும், கன்னடர்களும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். உங்களைப் போன்றவர்களால் தான், ஆங்காங்கே குழப்பங்கள் ஏற்படுகின்றன. உங்கள் சுயநலனிற்காக இங்குள்ளவர்களின் ஒற்றுமையைக் குலைக்க வேண்டாம்.
யாரோ ஒருவரின் பின்னால் நின்றுகொண்டு அறைகூவல் விடாமல், கர்நாடகத்திற்கு வந்து தொண்டர்களை அரவணைத்து, உங்களுக்குக் கொடுக்கப்பட்ட பதவியில் நல்ல முறையில் செயலாற்றுங்கள். இல்லையென்றால், ராஜினாமா செய்துவிட்டு யாருக்கு வேண்டுமென்றாலும் துதிபாடுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.