தமிழகத்தில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள 60 லட்சம் ஏழைத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.2000 சிறப்பு நிதி உதவி வழங்கப்படும் என்று சட்டசபையில் கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இதற்காக ரூ.1200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேர்தலில் வாக்களிப்பதற்கு லஞ்சமாக, அதையும் சட்டப்பூர்வமாக மக்களுக்குக் கொடுப்பதாக, எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. சட்டப்பஞ்சாயத்து இயக்கமோ, இந்தத் திட்டத்திற்கு தடை கோரி, உயர்நீதிமன்றத்தில் முறையிட்டது. அதற்கு, 'அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது' என நீதிமன்றம் கருத்து வெளியிட்டது.
இந்நிலையில், இந்தத் திட்டத்தை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்துள்ளார். திட்டம் தொடங்கி வைக்கப்பட்டாலும், இதற்கான கணக்கெடுக்கும் பணிகளும், தொழிலாளர்களின் விபரங்களும் தீவிரமாக சேகரிக்கப்பட்டு வருகின்றன.
‘இந்தத் திட்டம் உண்மையிலேயே ஏழை மக்களுக்குப் பயனளிக்கும்’ என ஒரு வாதத்துக்காக வைத்துக் கொண்டாலும், ஏழை மக்களுக்குக் கொடுப்பதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், அரசாங்க சம்பளம் வாங்குபவர்களுக்கும், அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கும் பணம் கொடுப்பதற்காக கணக்கெடுத்துச் சென்றுள்ளதை எப்படி ஏற்க முடியும்?" என்றார் சென்னைவாசியான நம் நண்பர்.
அவரே தொடர்ந்து, "போலீஸ்காரங்களுக்கு என்ன குறைச்சல்? சம்பளத்திற்கு மேல கிம்பளம்னு நிறைய வாங்குறாங்க. அவங்க வசிக்கிற குடியிருப்பிலும் மாநகராட்சி சார்பில் வந்து கணக்கெடுத்து, அப்ளிகேசன் வாங்கிட்டு போயிருக்காங்க." என்றார் ஆற்றாமையுடன்.
இதுதொடர்பாக கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்ட அரசாங்க ஊழியரோ “என்னை அப்ளிகேசன் கொடுத்து நிரப்பி வாங்கிட்டு வரச்சொன்னாங்க. அதை நான் பண்ணுறேன். நெல்லுக்குப் பாயும் நீர் புல்லுக்கும் பாயும்ல. அதுபோலத்தான் இந்தத் திட்டம்.” என்று விளக்கம் தந்தார்.
ஔவையார் இயற்றிய மூதுரை வெண்பா இது -
நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம், தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரே அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை!
இன்றைய ஓட்டரசியலுக்கு, சங்ககாலப் புலவர் ஔவையார் பாடலைத் துணைக்கழைப்பது கொடுமைதான்!