திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசின் மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைப்பது ஏன் என்பதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் திட்டத்தின் கீழ் கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செப். 29ம் தேதி கலந்து கொண்டார். முகாம் முடிவில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தமி-ழக அரசு மேற்கொண்டு வரும் ஒவ்வொரு திட்டத்தையும் குறை சொல்லி வருகிறார். என் மீது ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறினார். ஆனால் இதுவரை எதையும் நிரூபிக்கவில்லை. உச்சநீதிமன்றம் இதற்கு தடை விதித்துள்ளது. அரசியல் காரணங்களுக்காக தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். திமுக ஆட்சியில்தான் ஏகப்பட்ட ஊழல்கள் நடந்துள்ளன.
கீழடியில் மூன்று கட்ட ஆய்வுகளுக்கு மத்திய அரசு நிதி வழங்கியது. நான்கு மற்றும் ஐந்தாம் கட்ட ஆய்வுகளுக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து, பணிகளை மேற்கொண்டு வருகிறது. கீழடியில் நடந்து வரும் அகழாய்வு பணிகளை அமைச்சர் பாண்டியராஜன் நேரில் பார்வையிட்டு உள்ளார். அந்தத் திட்டத்திற்குத் தேவையான நிதி உதவி செய்யப்படும். டிஎன்பிஎஸ்சி என்பது தன்னாட்சி அமைப்பு. அந்த அமைப்பின் அதிகாரத்திற்கு உட்பட்டு குரூப்-2 போட்டித்தேர்வுக்கான வினாத்தாள், பாடத்திட்டம் மாற்றப்பட்டு உள்ளது. இதில் அரசு தலையிட முடியாது.
பாஜக எங்களுடன்தான் தொடர்ந்து கூட்டணியில் இருக்கிறது. கூட்டணி தொடரும். பிரதமர் நரேந்திர மோடி, ஐ.நா. சபையில் தமிழில் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது. இது தமிழர்களுக்குக் கிடைத்த பெருமை. நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக தமிழக காவல்துறைதான் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இது மத்திய அரசு நடத்தும் தேர்வு. இந்த தேர்வில் எந்தவித முறைகேடும் நடக்காமல் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன், மாயனூர் கதவணையை திமுக ஆட்சியின்போதுதான் கட்டியதாக கூறியது தவறு. ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில்தான் மாயனூர் கதவணை கட்டப்பட்டது. அதேபோல் குடிமராமத்துத் திட்டத்தையும் குறை கூறினார்கள். ஆனால் பல்வேறு பகுதிகளில் ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு உள்ளன. 83 ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணை தூர் வாரப்பட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள 40 ஆயிரம் ஏரிகள், குளங்கள் படிப்படியாக தூர் வாரப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர், வீணாக கடலில் கலப்பதாகச் சொல்கிறீர்கள். நம்முடைய நிலப்பரப்பு சமவெளியாக இல்லை. மலைகளுக்கு இடையில் இல்லை. அரை அல்லது ஒரு டிஎம்சி அளவு தண்ணீரை சேமித்து வைக்க 500 கோடி ரூபாய் செலவாகும். இதனால் நான்கு அல்லது ஐந்து இடங்களில் தண்ணீர் தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. உபரிநீர் ஊருக்குள் சென்று விடாமல் இருக்கவும் பார்த்துக் கொள்ள வேண்டும். மேட்டூர் முதல் கொள்ளிடம் வரை தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.