எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்த சீமான்
10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள சிறைவாசிகள் விடுதலை செய்வதாக அறிவித்துள்ள முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நன்றி தெரிவித்துள்ளார்.
நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ளவர்களைச் சிறைத்துறை விதிகளுக்குட்பட்டு விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்திருப்பதை முழு மனதோடு வரவேற்கிறேன். கடந்த 10 ஆண்டுகளாக இம்முடிவு தாமதமானதால் சிறைக்கூடங்கள் நிரம்பி வழிந்து, கைதிகள் பலர் விடுதலையின்றி விரக்திக்கு உள்ளான சூழலில் வந்திருக்கிற இந்த அறிவிப்பு பெரும் ஆறுதலாய் அமைந்திருக்கிறது.
தண்டனை காலம் முடிந்தும் பல ஆண்டுகளாக விடுதலை மறுக்கப்பட்டுச் சிறையில் வாடும் கைதிகளையும்,10 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் தண்டனை அனுபவித்துவரும் இசுலாமிய சிறைவாசிகள் உள்ளிட்ட அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை நீண்டநெடிய நாட்களாக வைத்து போராடி வருகிறோம். அதனை ஏற்றிருக்கிற தமிழக அரசின் முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது. தாமதிக்கப்பட்ட நீதி அநீதிக்குச் சமம் என்பார்கள். எனவே, தமிழக அரசானது இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாகப் பத்தாண்டுக்கு மேலாகச் சிறையிலிருக்கும் சிறைவாசிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோருகிறேன். சிறைவாசிகளின் உடல் நலன், குடும்பச்சூழல், நன்னடத்தை ஆகியவற்றைக் கவனத்திற்கொண்டு உடனடியாக அவர்களை விடுதலைசெய்ய வேண்டுமெனத் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
பத்தாண்டு சிறைவாசிகள் விவகாரத்தில் தற்போது எடுத்திருக்கிற இம்முடிவைப் போலவே, எழுவர் விடுதலையிலும் உறுதியுடன் நின்று 161ஆவது விதியினைப் பயன்படுத்தி அதிமுக அரசு ஏற்கனவே எடுத்த நிலைப்பாட்டின்படி எழுவரையும் விடுதலை செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.