தமிழத்தில் உள்ள அணைகளை தமிழக அரசே பராமரிக்கும் வகையில் அணை பாதுகாப்பு மசோதாவில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசை அதிமுக வலியுறுத்தும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அவருடைய சொந்த ஊரான சேலத்திற்கு வருகை தந்தார். ஜூலை 21ம் தேதி, சேலம் மாவட்டம் இடைப்பாடியில் நடந்த அரசு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை, 100 ஏரிகளில் நிரப்ப 565 கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் மேட்டூர், சங்ககிரி, இடைப்பாடி, ஓமலூர் ஆகிய நான்கு தொகுதி மக்கள் பயன்பெறுவார்கள்,'' என்றார்.
இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியது:
தமிழகத்தின் நிதிநிலை தொடர்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஏற்கனவே தகுந்த விளக்கங்களை அளித்துள்ளார். மாநிலத்தின் நிதி ஆதாரத்தைப் பெருக்கி, தேவையான திட்டங்களை நிறைவேற்றுவோம். மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்குமாறு தொடர்ந்து வலியுறுத்துவோம்.
அணை பாதுகாப்பு மசோதாவைப் பொருத்தவரை, அதிமுக உறுப்பினர்கள் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்து, அதை நிறைவேற்ற முடியாத நிலையை உருவாக்கினர். மீண்டும் அங்கு வலியுறுத்துவார்கள். தமிழகத்திற்குச் சொந்தமான அணைகளை நாமே பராமரிப்பதற்கு ஏதுவாக அணை பாதுகாப்பு மசோதாவில் உரிய திருத்தம் கொண்டு வர வலியுறுத்தப்படும். நமது மாநிலத்திற்கு உகந்ததாக இல்லையெனில் நிச்சயமாக எதிர்ப்போம்.
ராசிமணலில் அணை கட்டும் விவகாரத்தைப் பொருத்தவரை ஏற்கனவே உச்சநீதிமன்றம், எந்தவித புதிய அணை கட்டுவதோ, தண்ணீரை தடுக்கவோ, திருப்பி விடவோ கூடாது என உத்தரவிட்டுள்ளது. அதனை தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் பின்பற்ற வேண்டும்.
அத்திவரதர் சிலை இடமாற்றம் செய்வது குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். அதில் பக்தர்கள் எவ்வித இடையூறுமின்றி தரிசனம் செய்ய ஆலோசனை நடத்தப்பட்டது.
கர்நாடகா மாநிலத்தில் நிலவி வரும் அரசியல் பிரச்னையில் தலையிடுவது சரியாக இருக்காது. சேலம் இரும்பாலையை தனியார்மயமாக்கல் கூடாது என தொடர்ந்து குரல் கொடுப்போம். உள்ளாட்சித் தேர்தலைப் பொருத்தவரை வார்டு மறுவரையறை செய்யப்பட்டது. எப்போது தேர்தல் தேதி அறிவிப்பது என்பது குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது. அதன்படி தேர்தல் நடத்தப்படும்.
நீர் மேலாண்மையில் ஒரு சொட்டு தண்ணீர்கூட வீணாகக்கூடாது என கவனம் செலுத்தி வருகிறோம். தற்போது மேட்டூர் கிழக்கு, மேற்கு கரையில் கான்கிரீட் கால்வாயால் 20 சதவீதம் நீர் மிச்சப்படுத்தப்படுகிறது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.