எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்: நாஞ்சில் சம்பத்
மெர்சல் படத்தை இண்டர்நெட்டில் பார்த்த எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
தினகரன் அணியைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத் தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், நடிகர் விஜய் நடித்த மெர்சல் படத்தில் இடம் பெற்ற ஜி.எஸ்.டி குறித்த கருத்துக்கு எச்.ராஜா விமர்சனம் செய்வது கண்டிக்கதக்கது. ஒரு காலத்தில் அண்ணாவின் ஓர் இரவு, வேலைக்காரி, சொர்க்க வாசல் போன்றவை திராவிட இயக்கத்திற்கு புத்துணர்ச்சியை தந்தது. இதே போல் கலைஞரின் பராசக்தி, திரும்பிபார் போன்ற படங்கள் தமிழகத்தில் புதிய எழுச்சியை உருவாக்கியது.
தமிழகத்தில் லட்சக்கணக்கான இளைஞர்களின் ஆதரவை பெற்றுள்ள நடிகர் விஜய், ஜி.எஸ்.டியை பற்றி ஒரு வார்த்தை கூறியதற்காக எச்.ராஜாவும், தமிழிசையும் பேசி வருவது வருத்தம் அளிக்கிறது. மெர்சல் படத்திற்கு அவர்கள் இருவரும் விளம்பரம் தேடி தருகிறார்கள். இதற்கு நடிகர் விஜய் நன்றி கடன் பட்டுள்ளார். மெர்சல் படத்தை இண்டர்நெட்டில் பார்த்த எச்.ராஜா மீது போலீசார் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இரட்டை இலை சின்னம் குறித்து தேர்தல் கமிஷன் விசாரித்து வருகிறது. தேர்தல் கமிஷன் இந்த விஷயத்தில் நியாயமாக நடந்து கொள்ளும் என்று நம்புகிறோம். தமிழகத்தை மோடி தான் காப்பாற்றுகிறார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். இதில் இருந்தே மோடி தான் தமிழகத்தை வழி நடத்துகிறார் என தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.