Published on 06/05/2020 | Edited on 06/05/2020
கரோனா வைரஸ் என்ற கொடிய நோய் பயமுறுத்துவது ஒருபுறமென்றால், மறுபுறம் நாடு முழுக்க பல கோடி மக்கள் வறுமை நோயால் சூழ்ந்து விட்டனர்.
இரண்டு முறை இந்தியாவை நான்தான் ஆளுகிறேன் என்று அடையாளப்படுத்துவது போல பிரதமர் மோடி தொலைகாட்சியில் தோன்றி அறிவுரை சொல்லி விளக்கேற்ற வைத்தும் கை தட்டச் சொல்லியும் பேசிவிட்டு போய்விட்டார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அடிக்கடி வரும் விளம்பரத்தில் தோன்றி வீட்டிலேயே இரு.. விலகியே இரு என்று சொல்கிறார். ஆனால் ஒவ்வொரு நாள் உழைப்பால் பெறும் கூலியின் மூலம் அன்றாடங்காய்ச்சிகள் என்ற ஏழை, எளிய மக்களுக்கு உண்மையான நோய் என்றால் அன்றாட தேவைகளை பசியை போக்க முடியாத வறுமைதான்.
தமிழக அரசு இந்த 45 நாட்களில் ஆயிரம் ரூபாய் ரொக்கமும், ரேசன் அரிசியும் கொடுத்துள்ளது. இப்போது உள்ள நிலை என்னவென்றால், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் நடுத்தர குடும்பங்கள்கூட ரேசன் அரிசி மூலமே பசியை போக்கிக் கொள்கிறார்கள், அப்படிப்பட்ட ரேசன் அரிசியை தரமானதாக கொடுக்க வேண்டிய அரசு தரமற்றதாய், சமைத்து சாப்பிட முடியாததுபோல் இருந்தால் என்ன செய்வார்கள் அதைத்தான் ஈரோடு மக்கள் இப்படி செய்தார்கள். ஈரோடு சம்பத் நகரில் வள்ளியம்மை வீதியில் 900 ரேஷன் கார்டுகள் கொண்ட ஒரு ரேஷன் கடை உள்ளது. இந்த கடையில் அனைவரும் பொருள் பெற்று வந்தார்கள்.
இன்று அந்த ரேசன் கடையில் மக்களுக்கு அரிசி வழங்கப்பட்டது. அது உணவுக்கு பயன்படுத்த முடியாத தரமில்லாமல் இருந்துள்ளது. எனவே பொதுமக்கள் தரமற்ற அரிசி வழங்குவதாக கூறி அந்த ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அந்த கடையில் வழங்கப்பட்ட தரமற்ற ரேஷன் அரிசியை கடை முன்பு கொட்டி வைத்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்த ஊராடங்கு காலத்தில் கூட மனசாட்சியில்லாமல் ரேஷன் அரிசி மோசமாக வழங்குவதாக கூறி கோஷமிட்டனர். இதனை தொடர்ந்து அந்த இடத்திற்கு வந்த ஈரோடு வட்டாட்சியர் பரிமளாதேவி வந்தார். அவரையும் பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தரமான அரிசி கிடைப்பதற்கு உறுதியாய் வழிவகை செய்கிறோம் என்று கூறியதால் கோபத்தோடு மக்கள் கலைந்து சென்றனர்.
வேறு வழி இல்லை இப்போது எதை கொடுத்தாலும் மக்கள் சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும் என இந்த அரசு நிர்வாகம் நினைக்கிறது.