விழுப்புரம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கடந்த 30.06.2022 அன்று விழுப்புரம் சாலமேடு பகுதியைச் சேர்ந்த பிரபா அரவிந்தன்(20) என்பவர், புகார் ஒன்று கொடுத்தார்.
அந்தப் புகாரில், 28.06.2022 அன்று அவரது கைபேசிக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இந்த செய்தியை வீட்டில் இருந்தபடியே வேலை செய்து ஒரு நாளைக்கு 7000 வீதம் பணம் சம்பாதிக்கலாம் அதற்கான ஆலோசனை வழங்குவதாக இருந்துள்ளது. இதை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பதற்காக முன் பணமாக ஒரு குறிப்பிட்ட தொகையை அவர்கள் கூறும் வங்கி கணக்கில் அனுப்புமாறு அரவிந்தனிடம் கூறியுள்ளனர்.
அதன்படி அந்த மர்ம மனிதர்கள் கொடுத்த வங்கி கணக்கிற்கு சிறிது சிறிதாக அரவிந்தன் தனது வங்கிக் கணக்கில் இருந்தும், ஜி-பே மூலமாக மொத்தம் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் அனுப்பி உள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் எந்த விவரமும் தெரியாததால், குறுஞ்செய்தி அனுப்பிய நபரை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், அந்த நபர் பதில் அளிக்காமல் இருந்துள்ளார். அப்போதுதான் அரவிந்தன் தான் ஏமாறியது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து அவர், உடனடியாக சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரை பெற்ற சைபர் கிரைம் காவல்துறையினர் அந்த மர்ம நபரின் வங்கிக் கணக்கை முடக்கியுள்ளனர். அதன்பிறகு அந்த வங்கி கணக்கில் இருந்து ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட அந்தப் பணத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா மற்றும் சைபர் கிரைம் குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் ஆகியோர் பிரபா அரவிந்தனிடம் இன்று ஒப்படைத்துள்ளனர்.
இப்புகாரின் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொண்ட உதவி ஆய்வாளர் ரவிசங்கர், முகமது அசாருதீன் மற்றும் ராஜசேகர் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா பாராட்டுகளை தெரிவித்தார். அதேபோல், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளருக்கும் தனது பாராட்டைத் தெரிவித்தார்.