கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளிலும், புறநகர் பகுதியைப் பொறுத்தவரையில் ஒரு சில இடங்களிலும் நள்ளிரவில் திடீரென இடி, மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. ஒரு சில இடங்களில் விடிய விடிய லேசானது முதல் கனமான மழை பெய்து வருகிறது.
இதனால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மோசமான வானிலை காரணமாக விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து பறந்த நிலையில் ஒரு விமானம் பெங்களூருக்குத் திருப்பி அனுப்பப்பட்டது. 4 விமானங்கள் தாமதமாக தரையிறங்கின. சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய 8 விமானங்களும் தாமதமானதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.