கந்தசஷ்டியை முன்னிட்டு முருக பக்தர்கள் விரதமிருந்து ஆறுபடை கோயிலுக்குச் சென்று முருகனை தரிசித்து வருகிறார்கள்.அதுபோல் திமுக தலைவர் ஸ்டாலின் மனைவியான துர்கா ஸ்டாலினும் பழனி முருகனை தரிசிப்பதற்காக கோவையில் இருந்து நேற்று இரவு பழனிக்கு வந்து தங்கி இருந்தவர் அதிகாலையில் பழனி முருகனை தரிசிக்க விஞ்சு மூலம் மலைக் கோயிலுக்குச் சென்றார்.
அப்பொழுது கோயில் துணை ஆணையர் செந்தில்குமார் வரவேற்றார் அதைத்தொடர்ந்து சாயரட்சை பூஜையில் துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டு பழனி மூலவரான நவபாஷான முருகனை தரிசனம் செய்ததுடன் மட்டுமல்லாமல் குடும்பத்தாரின் பெயருக்கு அர்ச்சனை செய்தார். அதன்பின் மலைக் கோவிலில் உள்ள போகர் சன்னதியில் சிறிது நேரம் உட்கார்ந்து தியானம் செய்தார் அதன் பின் மலைக் கோயிலில் இருந்து புறப்பட்டு சென்றார்.
இப்படி கந்த சஷ்டியை முன்னிட்டு பழனி முருகனை தரிசிக்க வந்த துர்கா ஸ்டாலினை பழனி சட்டமன்ற உறுப்பினரும் கிழக்கு மாவட்ட செயலாளருமான ஐ பி செந்தில்குமார் அவரது மனைவி அருள் மெர்சி செந்தில்குமார் ஆகியோர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
அதுபோல் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவியும் மாநில பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்தும் கந்த சஷ்டியை முன்னிட்டு விரதமிருந்து ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகனை தரிசிப்பதற்காக இன்று காலையில் பழனி முருகன் கோவிலுக்கு வந்து முருகனை தரிசித்து விட்டு சென்றார்.
அப்பொழுது பத்திரிகையாளர்களிடம் பேசிய பிரேமலதா "தலைவர் கேப்டன் விரைவில் பழைய கம்பீரத்துடன் வருவார் கந்த சஷ்டியை முன்னிட்டு விரதமிருந்து ஆறுபடை முருகன் கோவிலுக்கு சென்று வருகிறேன். அதன்படி பழனி கோயிலுக்கு வந்து முருகனை தரிசித்தேன். தமிழகத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் அரசு டாக்டர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறை வேற்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரை நேரில் சந்தித்து பேசுவேன்" என்று கூறினார்.
இப்படி முருகனை தரிசிக்க வந்த பிரேமலதாவுடன் மேற்கு மாவட்ட செயலாளர் பாலு என்ற பாலசுப்ரமணி உள்பட சில நிர்வாகிகள் உடன் வந்திருந்தனர்.