Skip to main content

மதுபோதையில் ஓட்டுநர்; கேள்விக்குறியான 12 பள்ளிக் குழந்தைகளின் உயிர்?

Published on 09/09/2023 | Edited on 09/09/2023

 

 driver who drove a school bus under the influence of liquor

 

கோவை மாவட்டம் கோவை புதூர் பகுதியில் தனியார் அகாடமி பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவர்களை ஒருசில பெற்றோர்கள் பள்ளிக்கு அழைத்து வந்து விட்டுச் சென்று, அதன்பிறகு பள்ளி முடிந்தவுடன் பெற்றோர்களே தங்களுடைய பிள்ளைகளை அழைத்துச் செல்வார்கள்.

 

இதற்கிடையில், சில பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளைப் பள்ளி வாகனங்களில் அனுப்பி வைத்து வருகின்றனர். அதன்படி, காலையில் வீட்டில் இருந்து அழைத்துச் செல்வதும் மாலையில் பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு அழைத்துச் செல்வதும் வழக்கம். அந்த வகையில், இந்த அகாடமி பள்ளியில் கோவை புதூரில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு அப்பள்ளியின் காண்ட்ராக்ட் வாகனங்கள் சென்று குழந்தைகளை ஏற்றி வருகிறது.

 

இந்நிலையில், இந்த பள்ளியில் டிரைவராக வேலை செய்து வருபவர் செந்தில். இவர், கடந்த 7ஆம் தேதியன்று கோவை புதூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வழக்கம்போல் குழந்தைகளைத் தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வந்துள்ளார். அப்போது, இந்த வாகனம் வடவள்ளியைக் கடந்த நிலையில், குருசாமி நகரில் நடுரோட்டில் திடீரென நின்றுள்ளது. மேலும், இந்த வாகனம் நடுரோட்டில் நின்றதால் அந்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

 

இதையடுத்து, அங்கிருந்த வாகன ஒட்டிகள் பள்ளி வாகனத்தில் வந்து பார்த்தபோது அந்த வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் ஸ்டியரிங்கில் தலை வைத்தபடி படுத்துக்கொண்டிருந்தார். ஒருகணம், இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் அந்த டிரைவருக்கு ஏதாவது விபத்து நடந்திருக்குமோ என அச்சமடைந்தனர். அதன்பிறகு, டிரைவரிடம் சென்றவர்கள் அவரை எழுப்ப முயன்றபோது அவர் மது போதையில் இருப்பது தெரியவந்தது. 

 

இதற்கிடையில், இச்சம்பவம் குறித்து விசாரித்தபோது அந்த ஓட்டுநரின் பெயர் செந்தில் என்பதும் அவர் தலைக்கேறிய மது போதையில் வாகனத்தை ஓட்ட முடியாமல் தத்தளித்துக்கொண்டு ஸ்டியரிங் மேலே உறங்கியது தெரியவந்தது. மேலும், பள்ளி குழந்தைகளை வாகனத்தில் வைத்துக்கொண்டு டிரைவர் செய்த செயல் அங்கிருந்தவர்களைக் கொதிப்படைய வைத்தது.

 

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து பெற்றோர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்தவர்கள் தங்களுடைய குழந்தைகளைப் பத்திரமாக மீட்டனர். இதையடுத்து, தகவலறிந்த பள்ளி நிர்வாகத்தினர் மாற்று வாகனம் ஏற்பாடு செய்து செந்திலின் வாகனத்தில் இருந்த 12 குழந்தைகளையும் பத்திரமாகப் பள்ளிக்கு அழைத்துச் சென்றனர். அதே நேரம், மது போதையில் அலட்சியப்படுத்திய வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் செந்தில் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குழந்தைகளின் பெற்றோர்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர்.

 

அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் செந்திலை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, பள்ளி வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் மது போதையில் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்