பாம்பு மீது ஏறாமல் இருக்க லாரியை நிறுத்திய ஓட்டுனர்; பின்னால் வந்த லாரி மோதியதில் இருவர் பலி
சேலம் மாவட்டம், காடையாம்பட்டியை அடுத்த தாசசமுத்திரம் ஊராட்சி, அக்ரஹாரம் அருகே மாதன்காடு என்ற இடத்தில், உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தருமபுரியில் இருந்து சேலம் நோக்கி ஒரு லாரி வந்து கொண்டிருந்தது.
இந்த இடத்தில் லாரி வந்தபோது சாலையின் குறுக்கே சாரைப்பாம்பு ஒன்று வந்துள்ளது. அந்த பாம்பை பார்த்ததும் அதன் மீது லாரி ஏறாமல் இருக்க லாரியின் டிரைவர் திடீரென பிரேக் போட்டு லாரியை நிறுத்தினார்.
இந்த லாரியின் பின்னால் வந்துகொண்டிருந்த மற்றொரு லாரியின் ஓட்டுனர் நிலைமையை உணரும் முன்பாகவே முன்னால் நின்ற லாரி மெது பின்னால் வந்த லாரியின் பின்பகுதியில் பயங்கரமாக மோதியது.
இதில் பின்னால் வந்த லாரியின் முன்பகுதி நொறுங்கியது. இந்த விபத்தில் அந்த லாரியில் இருந்த டிரைவர் மற்றும் கிளனர் ஆகிய இருவரும் அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இதற்கிடையில் பின்னால் வந்த லாரி மோதிய வேகத்தில் நிறுத்தப்பட்ட லாரியும் நகர்ந்து சென்றதில் பாம்பின் மீது ஏறி பாம்பும் செத்தது. விபத்து ஏற்பட்டதும் விபத்துக்கு காரணமாக லாரியை ஓட்டிவந்த டிரைவர் அங்கிருந்து உடனே தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த தீவட்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவர்களின் உடலை கைப்பற்றி ஓமலூர் அரசு மறிதுவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் விபத்தை ஏற்படுத்திய லாரியையும், விபத்துக்குள்ளான லாரியையும் அப்புறப்படுத்தினர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விபத்தில் இறந்த லாரியின் ஓட்டுனர் தர்மபுரி மாவட்டம் மாதையன்குட்டை பகுதியை சேர்ந்த இராதாகிருஷ்ணன் மகன் தங்கதுரை (வயது-22), அந்த வண்டியில் உதவியாளராக வந்தவர் செங்கல்மேடு பகுதியை சேர்ந்த பரமசிவம் மகன் ரமேஷ் (வயது-19) என்பதும் தெரியவந்தது. இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சிவசுப்பிரமணியம்