இந்தியாவில் ‘கோவிஷீல்ட்’ மற்றும் ‘கோவாக்சின்’ தடுப்பூசிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டு, கடந்த 16ஆம் தேதியில் இருந்து முதற்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு மட்டும் செலுத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே ‘கோவாக்சின்’ தடுப்பூசியின் நம்பகத்தன்மை குறித்து அரசியல் கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் விமர்சனங்களை முன்வைத்தனர். மேலும் ‘பிற நாடுகளைப் போல பிரதமரோ முதல்வரோ அமைச்சர்களோ ஏன் தடுப்பூசி செலுத்திக்கொண்டு மக்களுக்கு நம்பிக்கையளிக்கக் கூடாது?’ என்ற கேள்வியையும் எழுப்பினர்.
இந்நிலையில் தமிழ்நாட்டின் சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று (22.01.2021) காலை 9 மணிக்கு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதாக தெரிவி்த்திருக்கிறார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர், “ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இன்று காலை 9 மணிக்கு கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்கிறேன். சுகாதாரப் பணியாளர்களிடையே நம்பிக்கையை வளர்க்க, ஒரு மருத்துவராகவும் இந்திய மருத்துவ சங்கத்தின் உறுப்பினராகவும் நான் இதை செய்கிறேன். அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டு கரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.