Skip to main content

“சமூகநீதிக்காக என்னுடன் தோள்நின்ற தோழர் சீதாராம் யெச்சூரி” - ராமதாஸ் இரங்கல்

Published on 12/09/2024 | Edited on 12/09/2024
Dr. Ramadoss condoles of Marxist leader Sitaram Yechury

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான சீதாராம் யெச்சூரி (வயது 72) வயது முதிர்வு காரணமாக நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நிமோனியா காய்ச்சலுக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இத்தகைய சூழலில் இவர் சிகிச்சை பலனின்றி இன்று (12.09.2024) காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், “இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நலக் குறைவால்  இன்று காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியுன், மிகுந்த வேதனையும் அடைந்தேன். சென்னையில் பிறந்த சீதாராம் யெச்சூரி இளம் வயதிலிருந்தே பொதுவுடைமை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தவர். பதின் வயதிலேயே தெலுங்கானா போராட்டத்தில் தீவிரம் காட்டிய யெச்சூரி, நெருக்கடி நிலை காலத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்தியாவின் மிகச் சிறந்த மாணவர் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த சீதாராம் யெச்சூரி சமூகநீதியிலும் அக்கறை கொண்டவர்.

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு கொண்டு வருவதற்கான எனது போராட்டத்திற்கு சீதாராம் யெச்சூரி துணை நின்றது எனது மனதில் இப்போது நிழலாடுகிறது. 2006 ஆம் ஆண்டு மே மாதம் டெல்லியில் நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கூட்டத்தில் ஓபிசி இட ஒதுக்கீட்டை உடனடியாக வழங்குவது சாத்தியமில்லை என்று கூறப்பட்ட நிலையில், உடனடியாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நான் குரல் கொடுத்தேன்.

அதைத் தொடர்ந்து கூட்டம் ஒத்திவைகப்பட்ட நிலையில், கூட்டணியில் உள்ள அனைத்து தலைவர்களையும் சந்தித்து ஆதரவுத் திரட்டினேன். பின்னர் மாலையில் தொடங்கி இரவு வரை நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற எனது கோரிக்கைக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் அன்றைய பொதுச்செயலாளர் ஹர்கிஷன்சிங் சுர்ஜித்தும்ம், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரியும் நிபந்தனையற்ற ஆதரவு அளித்தனர். அதேபோல் மற்ற தலைவர்களும் எனக்கு ஆதரவாக இருந்ததால் தான் 27% இட ஒதுக்கீடு சாத்தியமானது. சமூகநீதிக்காக என்னுடன் தோள்நின்ற தோழர் சீதாராம் யெச்சூரி அவர்களின் மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் இழப்பாகும். யெச்சூரியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், மார்க்சிஸ்ட்  உள்ளிட்ட அனைத்து பொதுவுடைமை இயக்கத்தினருக்கும்  இரங்கல்களையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்