டாக்டர் பாலாஜி நியமனத்தை எதிர்த்த வழக்கு ஒத்திவைப்பு
ஜெயலலிதாவின் கைரேகையை சான்றளித்த மருத்துவர் பாலாஜியை, தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர் செயலராக நியமித்ததை எதிர்த்த வழக்கின் உத்தரவை அக்டோபர் 9ஆம் தேதி வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, தஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்களை அங்கீகரித்து கைரேகை வைத்ததற்கு சான்றளித்தவர் டாக்டர் பாலாஜி. அடுத்த சில தினங்களில் அவரை தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர் செயலராக நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறி, அவரது நியமனத்தை ரத்து செய்ய கோரி மாற்றம் இந்தியா அமைப்பு இயக்குனர் பாடம் நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது, ஏற்கனவே உறுப்பினர் செயலராக இருந்த அமலோர்பவ நாதனை நீக்கிவிட்டு, பாலாஜியை நியமித்துள்ளதாகவும், மூத்த மருத்துவர்களை மீறி இளையவரான பாலாஜியை நியமித்துள்ளதாகவும் வாதிடப்பட்டது.
அதேபோல ஆணைய செயற்குழு மற்றும் பொதுக் குழு உறுப்பினர்களின் ஒப்புதல் இல்லாமல் பாலாஜியை நியமித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த மனு மீதான உத்தரவை நேற்று பிறப்பிப்பதாக தெரிவித்தநர். ஆனால் நேற்றும், இன்றும் தீர்ப்பு வழங்கப்படாத நிலையில், அக்டோபர் 9ஆம் தேதி தீர்ப்பை அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.
சி. ஜீவா பாரதி