நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.
இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இந்தநிலையில் மதுரையில் அதிமுக வேட்பாளர் மருத்துவர் சரவணனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு திறந்தவெளி வேனில் பிரச்சாரம் மேற்கொண்டார். மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த அவர், வெயிலுக்காக பயந்து ஓரமாக நின்றிருந்த கட்சி நிர்வாகிகளைப் பார்த்துப் பேசுகையில், ''நாங்க எல்லாம் வெயிலில் இருக்கிறோம். நீங்கள் மட்டும் நிழலில் இருக்கலாமா... இதெல்லாம் நியாயமாப்பா... வாங்கப்பா உடம்புக்கு வெயில் நல்லதுமா. இந்த நேரத்துல வைட்டமின் டி கூடும். என்ன டாக்டர் ''எனச் சொல்ல, அருகில் இருந்த சரவணன் தலையை ஆட்டினார். அதன் பிறகு பேசிய செல்லூர் ராஜு, 'எம்.எஸ் படிச்ச டாக்டரே சொல்லிவிட்டார் வாங்க வெயிலுக்கு'' என்றார்.
அதே பரப்புரை கூட்டத்தில் கூட்டணியில் உள்ள பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொள்ள இருந்தார். ஆனால் அவர் வருவதற்கு தாமதமானதால் அதுவரை நடனமாடுங்கள் எனச் செல்லூர் ராஜு சொல்லிவிட்டார். உடனே 'கள்ளழகர் வாராரு' பாடல் போடப்பட்டது. அங்கிருந்த பெண்கள் உற்சாகமாக நடனமாடினர்.