சிம்பு - கௌதம் மேனன் கூட்டணியில் வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இவர்கள் கூட்டணியில் மூன்றாவது முறையாக வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்ற படம் 'வெந்து தணிந்தது காடு'. இப்படத்தின் சக்ஸஸ் மீட் நேற்று நடைபெற்றது.
இதில் பேசிய நடிகர் சிம்பு, ''ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். படம் பண்ணிக்கிட்டு இருக்கும்போது அப்டேட் கேக்குறீங்க. நிறைய அப்டேட்ஸ் வேணும்... அப்டேட்ஸ் வேணும்னு கேட்குறீங்க. உங்களுடைய ஆர்வம் எனக்கு புரிகிறது. ஆனால், ஒரு விஷயத்தை இங்கே ஷேர் பண்ணிக்க விரும்புகிறேன். டைரக்டராக இருக்கட்டும், ஹீரோவாக இருக்கட்டும் அந்த படத்தை உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பதற்கு ரொம்ப மெனக்கெட்டு வேலை செய்து கொண்டிருக்கிறோம். நீங்கள் தினமும் ஏதாவது ஒரு அப்டேட் கொடுங்க என்று சொல்லும் போது ஒரு தவறான டிசிஷன் எடுக்கக் கூடிய வாய்ப்பு நிறைய இருக்கிறது. அதனால் என்னுடைய ரசிகர்களுக்கு என்னுடைய ரிக்வெஸ்ட் என்னவென்றால் உங்களை சந்தோசப்படுத்துவது தான் எங்களுடைய முதல் வேலையே.
எனவே, எங்களுக்கு அதற்கான களத்தை கொடுத்தீர்கள் என்றால்தான் நல்ல படங்கள் வரும். அதையெல்லாம் நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். எல்லா ரசிகர்களும் ஒரு ஹீரோவை தூக்கி மேல வைப்பாங்க. ஆனால், நான் என்னுடைய ரசிகர்களை தூக்கி மேல வைக்கணும்னு நினைக்கிறேன். என் படத்துக்கு மட்டும் இல்ல. எல்லா படத்துக்கும் ரொம்ப தொந்தரவு பண்ணாதீங்க. உங்களுக்கு நல்ல படம் கொடுப்பதற்கு நாங்கள் எல்லோரும் உழைத்துக் கொண்டிருக்கிறோம். இது எங்க பத்து தல டைரக்டர் சொல்ல சொன்னாரு. அதனால தான் சொன்னேன்.'' என்றார்.