தமிழகத்தில் வழக்கமாக மார்ச் மாதத்தில் இருந்து தொடங்கும் கோடைக்காலம், நடப்பு ஆண்டில் ஜனவரி மூன்றாவது வாரத்திலேயே தொடங்கி விட்டது. பரவலாக 95 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பநிலை பதிவாகி வருகிறது. இந்நிலையில், கோடைக்காலத்தில் குழந்தைகளுக்கு வைரஸ் நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளதாகவும், அவர்களின் உடல்நலனில் பெற்றோர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
இது தொடர்பாக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர்களிடம் பேசினோம். “கோடைக்காலத்தை பொறுத்தவரை பெரும்பாலும் வைரஸ் தாக்குதல் காரணமாக குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக வாந்தி, வயிற்றுப்போக்கு, சின்னம்மை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இதனைத் தவிர்க்க நீர்ச்சத்து மிக அவசியம். குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுப்பொருள்களில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதை பெற்றோர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும். அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் 'ஓஆர்எஸ்' எனப்படும் உப்பு கரைசல் நீரை வழங்க வேண்டும். இவற்றை பருகினாலே குழந்தைகளுக்கு நோய்த்தாக்கம் 95 சதவீதம் குறைந்து விடும்.
வெயில் காலங்களில், காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத நிலையில் வெளியே செல்ல நேர்ந்தால், பாதுகாக்கப்பட்ட குடிநீரையும் உடன் எடுத்துச் செல்வது அவசியம். தாகம் ஏற்பட்டால் தண்ணீர் மட்டுமின்றி, இளநீர் பருகலாம். இளநீரில் உள்ள சோடியம், பொட்டாசியம் ஆகியவை குழந்தைகளுக்கு நீர்ச்சத்தை அளிக்கின்றன. குடிநீரைப் பொறுத்தவரை கொதிக்க வைத்து, பின்னர் ஆற வைத்து குடிக்கக் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு வழக்கத்திற்கு மாறாக உடல் உபாதைகள் காணப்பட்டால் உரிய மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவது அவசியம். குழந்தைகள் பிறந்த உடனே பிசிஜி தடுப்பூசி போடப்படுகிறது. இது அம்மை தடுப்பூசி என்று சொல்லப்பட்டாலும் காசநோயைத் தடுக்கவே போடப்படுகிறது. கோடைக்காலத்தில் குழந்தைகளை பரவலாக தாக்கும் மணல்வாரி அம்மை எனப்படும் தட்டம்மை பாதிப்பிலிருந்து பாதுகாக்க 'எம்எம்ஆர்' என்ற தடுப்பூசி இரண்டு தவணைகளில் செலுத்த வேண்டும்.
குழந்தை பிறந்த 9வது மாதத்தில் முதல் தவணையும், 15வது மாதத்தில் 2வது தவணையும் வழங்க வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இந்த தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். கோடையில் நோய் எதிர்ப்புத்திறன் குறைவாக உள்ள குழந்தைகளுக்கு சின்னம்மை பாதிப்பு அதிகளவில் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதற்காக சிக்கன்பாக்ஸ் என்ற தடுப்பூசி தனியார் மருத்துவமனைகளில் செலுத்தப்படுகிறது. ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு முதல் தவணையும், அடுத்த 3 மாத இடைவெளியில் 2வது தவணையும் இந்த தடுப்பூசியை செலுத்தி, சின்னம்மை பாதிப்பில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கலாம்” என்று தெரிவித்தனர்.