தேனி அரசு மருத்துவமனையில் இறந்ததாக கூறப்பட்டு உயிர் பிழைத்த குழந்தை, சிகிச்சை பலனின்றி நேற்று (05.07.2021) பரிதாபமாக இறந்தது.
தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் அருகே இருக்கும் தாமரைக்குளம் தாசில்தார் நகரைச் சேர்ந்தவர் பிலவேந்திர ராஜா. இவர், டிரைவர் வேலை பார்த்துவருகிறார். இவரது மனைவி பாத்திமா மேரி. இவர்களுக்கு எட்டு மற்றும் ஐந்து வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், பாத்திமா மேரி மூன்றாவது முறையாக கர்ப்பமடைந்தார். பிரசவ வலி ஏற்படவே அவரை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக உறவினர்கள் சேர்த்தனர். அங்கு அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தை சிறிது நேரத்தில் இறந்துவிட்டதாக கூறி மருத்துவமனை பணியாளர்கள் ஒரு வாளியில் பெண் சிசுவின் உடலை வைத்து பாத்திமா மேரியிடம் கொடுத்துள்ளனர்.
இதனால் மனவேதனை அடைந்த தம்பதியினர், தமது உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்து குழந்தையை அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். பெரியகுளம் தென்கரை உள்ள கல்லறையில் குழந்தையை அடக்கம் செய்ய கொண்டு வந்தனர். அப்போது வாளியைத் திறந்து பார்த்தபோது குழந்தை கண் விழித்து கைகளை அசைத்த நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக குழந்தையை மீண்டும் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்தனர். நேற்று காலை 11 மணிமுதல் குழந்தைக்கு வெண்டிலேட்டர் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. தொடர் சிகிச்சையில் இருந்த குழந்தை திடீரென சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜி நாதன், “பாத்திமா மேரிக்கு 6 மாதத்தில் குறைப் பிரசவம் நடந்துள்ளது. 700 கிராம் எடையில் பெண் குழந்தை பிறந்தது. டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் உயிரோடு இருந்த குழந்தையை இறந்ததாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சம்பவத்தன்று பணியில் இருந்த இரண்டு டாக்டர்கள் மற்றும் நான்கு செவிலியர்களுக்கு மெமோ அனுப்பப்பட்டுள்ளது. மேலும், அவர்கள்மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
இதுகுறித்து பிலவேந்திர ராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் கூறும்போது, “பிறந்த குழந்தையின் நாடித்துடிப்பு இதயத்துடிப்பு முறையாக உள்ளதா என்பதைக் கூட பரிசோதனை செய்ய அரசு டாக்டர்களுக்குத் தெரியாதா? எங்களைப்போல வேறு யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளனரா என்று தெரியவில்லை. உயிரோடு பிறந்த குழந்தைக்கு அரசு ஆஸ்பத்திரியிலேயே இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. பின்னர் அதற்கு சிகிச்சை அளித்து நேற்று மீண்டும் ஒரு இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதனால் அரசு டாக்டர்கள் மற்றும் அலுவலர்களின் மெத்தனப் போக்கைக் கண்டித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்கள். அப்படியிருந்தும் குழந்தையின் உடலை வாங்க மறுத்து மருத்துவமனை முன்பு உறவினர்கள் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.