இன்று (மே 23) நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகும் முக்கியமான நாள். அரசியல் கட்சிகள் பதற்றத்துடனும் பொதுமக்கள் ஆர்வத்துடனும் காத்திருக்கின்றனர். எக்சிட் போல் எனப்படும் வாக்களித்தவர்களிடம் எடுக்கப்படும் கருத்துக்கணிப்பு பலவிதமான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. அத்தனை விவாதங்களையும் நாளைய முடிவுகள் முடித்துவைக்கும்.

வாக்கு எண்ணிக்கை பல சுற்றுகளாக நடைபெறும். அந்த சுற்றுகளின் எண்ணிக்கையை தீர்மானிப்பது அந்தந்த தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னனு வாக்குப்பதிவு எந்திரங்களின் எண்ணிக்கை. வாக்குப்பதிவு மையங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து எந்திரங்களின் எண்ணிக்கை மாறும். வாக்கு எண்ணிக்கை மையங்களில் 14 மேஜைகளில் வாக்கு எண்ணிக்கை நடக்கும். ஒவ்வொரு மேஜையிலும் ஒரு எந்திரம். ஒரு முறை 14 எந்திரங்களிலும் பதியப்பட்டுள்ள வாக்குகளை எண்ணி முடிப்பது ஒரு சுற்று எனப்படுகிறது.

இந்த நடைமுறையே இந்தத் தேர்தலிலும் கடைபிடிக்கப்படும். கூடுதலாக வாக்கு ஒப்புகை சீட்டின் மாதிரிகளும் எண்ணப்படும். இந்த வகையில் தமிழ்நாட்டில் தேர்தல் நடந்த 38 தொகுதிகளில் அதிக சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கும் தொகுதி திருவள்ளூர் தொகுதி ஆகும். இங்கு 34 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படும். இதற்கு அடுத்தபடியாக ஸ்ரீபெரும்புதூர் மற்றும் காஞ்சிபுரம் தொகுதிகளில் 32 சுற்றுகளாகவும் கோயம்புத்தூரில் 30 சுற்றுகளாகவும் வாக்குகள் எண்ணப்படும். எனவே தமிழகத்தின் முழு தேர்தல் முடிவுகளை அதிகாரப்பூர்வமாக தெரிந்துகொள்ள திருவள்ளூருக்காக அனைவரும் காத்திருக்கவேண்டும்.