ஊரடங்கை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் வேலை வாங்கித் தருகிறோம் அதற்கு முன்பணம் செலுத்த வேண்டும் என ஏமாற்றி பணம் பறிப்பது போன்று நிறைய ஆன்லைன் குற்றங்கள் அரங்கேறி வரும் நிலையில், அது மாதிரியான அழைப்பை துண்டித்து விட வேண்டும் என கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
மேலும், பெண்கள் தங்கள் புகைப்படங்களை வாட்ஸ் அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யாதீர்கள். அப்புகைப் படங்களை வைத்து மார்ஃபிங் செய்து சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக கூறி பணம் கேட்டு மிரட்ட வாய்ப்புண்டு. அதற்கு இடமளிக்க வேண்டாம்.
அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அறிமுகம் இல்லாத நபர் உங்களுடன் பேசுவதை வீடியோ பதிவு செய்தோ, ஸ்கிரீன் ஷாட்டோ எடுத்து பணம் கேட்டு மிரட்டினால் போலீஸிடம் புகார் அளிக்க வேண்டும்.
உங்களது வங்கி கணக்கு எண் தொடர்பான விவரங்களை செல்ஃபோனில் தொடர்பு கொண்டு யாராவது கேட்டால் கொடுக்க வேண்டாம். ஆன்லைனில் குறைந்த விலையில் ஆக்சிஜன் சிலிண்டர் தருவதாக கூறினால் முன்பணம் செலுத்த வேண்டாம்.
இதயத் துடிப்பு மற்றும் இரத்த ஓட்டத்தை கண்டறியும் கருவி என்றுகூறி வரும் எந்த செயலியையும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம். அந்த செயலி மூலம் உங்களது கை ரேகைகளை பயன்படுத்தி தகவல்களை திருட வாய்ப்புள்ளது. உங்கள் குழந்தைகள் ஆன்லைனில் என்ன விளையாடுகிறார்கள்? என்பதை கண்காணிக்க வேண்டும்.
பணம் செலுத்தி ஆன்லைனில் குழந்தைகள் விளையாடுவது குறித்து கண்காணிப்பு செய்ய வேண்டும். அதுபோன்ற விளையாட்டுகளை தவிர்க்க குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளனர்.