Skip to main content

“சாலைகளுக்கு வருபவர்களைத் துன்புறுத்தக் கூடாது..” -காவல்துறை நடவடிக்கைக்கு எதிரான வழக்கில் உத்தரவு!

Published on 30/03/2020 | Edited on 30/03/2020

கரோனாவை தடுப்பதற்கான ‘லாக்டவுன்’ காலத்தில் அத்தியாவசிய தேவைகளுக்காக சாலைகளுக்கு வருபவர்களைத் துன்புறுத்த கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா தொற்றை தடுக்க மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவு மற்றும் மாநில அரசின் 144 தடை உத்தரவு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பால், மருந்து, மளிகை போன்றவற்றை விற்கவும், விநியோகிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசின் சமூக விலகல் அறிவுத்தலால் அத்தியாவசிய பொருட்களை வாங்க வருபவர்களிடம்,  சட்டத்தை அமல்படுத்துகிறோம் என்ற பெயரில் காவல்துறை கடுமையாக நடந்துகொள்வதாக சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.எல்.ரவி,  பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.

 

500 கோடி ரூபாய் நிதியுதவி... ரிலையன்ஸ் நிறுவனம் அறிவிப்பு  #21daylockdown #COVID19outbreak #CoronavirusLockdown #Covid #reliance  https://www.nakkheeran.in/24-by-7-news/india/reliance-company-announces-rs-500-crore

 

மனுவில் அவர், 21 நாட்கள் ஊரடங்கு காரணமாக தினக்கூலிகள், தெரு வியாபாரிகள், வெளி மாநிலங்களிலிருந்து பணிக்கு வந்த தொழிலாளர்கள் தங்களுடைய அத்தியாவசிய தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள முடியாமல் தவிப்பதாக குறிப்பிட்டிருந்தார்.  மேலும்,  காவல்துறையினர் சாலையில் செல்பவர்கள் மீது தடியடிப் பிரயோகம் செய்கின்றனர் என்றும், சட்டத்திற்கு முரணாகச் செயல்படுபவர்களைக் கைது செய்யலாமே தவிர, அவர்களைத் தண்டிப்பதற்கு காவல்துறைக்கு அதிகாரம் இல்லை எனவும் அதில் தெரிவித்திருந்தார்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக,  இந்த வழக்கு வாட்ஸ் -ஆப் வீடியோ கால் மூலம் இன்று விசாரிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் திருஞானசம்பந்தம் என்பவர் திநகரில் உள்ள அவரது வீட்டில் இருந்தபடியே வாட்ஸ்-ஆப் வீடியோ கால் மூலம் பதில் அளித்தார்.

மேலும், அரசினுடைய கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் வீடியோ கால் மூலம் நீதிபதிக்கு பதிலளித்தார். அப்போது, எந்த ஒரு விதிமுறையும் மீறப்படவில்லை.  இதுவரை ஊரடங்கை மீறியவர்கள் மீது 17,118 வழக்குகள்பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார்.

இருதரப்பு வாதங்களையும் நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் பெஞ்ச் வீடியோ கால் மூலம் கேட்டறிந்தது.  இதனையடுத்து,  இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், நாங்கள் குறிப்பிட்ட எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றாலும்,  நடுநிலையான அணுகுமுறையைக் கையாளவேண்டும். மனித உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய பிரிவு 21-ன் கீழ் வாழும் உரிமை எந்த விதத்திலும் பாதிக்கக்கூடாது. தமிழகத்தில் கடைக்கோடி சராசரி மனிதன் இதனால் பாதிக்கக்கூடாது எனத் தெரிவித்துள்ளனர். அத்துடன்,  ஊரடங்கை மீறி பொதுமக்கள் சாலைகளில் வந்தால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்