தமிழிசையை விமர்சிக்க வேண்டாம்: ரசிகர்களுக்கு சூர்யா தலைமை நற்பணி இயக்கம் வேண்டுகோள்!
நீட் விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசையை விமர்சிக்க வேண்டாம் என நடிகர் சூர்யா தலைமை நற்பணி இயக்கம் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
முன்னதாக, நீட் தேர்வை எதிர்த்து நடிகர் சூர்யா எழுதிய கட்டுரை குறித்துப் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், "நீங்கள் கோடிக்காக நடித்தபோது எங்களைப்போன்றோர் தெருக்கோடியில் பணியாற்றிக் கொண்டிருந்தோம்.
ஒரு சிலரைப் பார்த்துவிட்டு நீங்கள் நீட் தேர்வை எதிர்க்கிறீர்கள். நான் பல்லாயிரக்கணக்கான மாணவர்களைப் பார்த்துவிட்டு நீட் வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளேன். யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம். ஆனால், நீட் குறித்து ஒரு நடிகருக்குத் தெரியுமா இல்லை ஒரு மருத்துவருக்குத் தெரியுமா? என அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
இதையடுத்து சமூக வளைதலங்களில் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் தமிழிசையை கடுமையாக விமர்சித்துள்ளனர். இந்த நிலையில் இன்று நீட் விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசையை விமர்சிக்க வேண்டாம், நம்முடைய செயல் யாரையும் காயப்படுத்தாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன் அளித்தால் போதுமானது. ரசிகர்களின் கருத்து தமிழிசையை எந்தவிதத்திலாவது காயப்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிக்கிறோம் என நடிகர் சூர்யா தலைமை நற்பணி இயக்கம் தெரிவித்துள்ளது.