திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் திமுக 37 வார்டுகளிலும், கூட்டணிக் கட்சிகள் 11 வார்டுகளிலும் போட்டி போடுகிறது. அதுபோல் அதிமுக 48 வார்டுகளிலும் போட்டி போடுகிறது.
இன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு காலையிலிருந்து மாநகரில் உள்ள அனைத்து வார்டுகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வந்தது. அதிலும் ஆண்களை விட பெண்கள் ஆர்வமாக நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள். அதோடு மாநகரில் உள்ள 4து வார்டு முன்னாள் அமைச்சர் சீனிவாசனின் மகனான ராஜ்மோகன் எதிர்த்து தி.மு.க சார்பில் நாகராஜன் போட்டி போடுவதால் அந்த வார்டு பதட்டமாக இருந்துவந்தது. அப்படி இருந்தும் பெண்கள் ஆர்வமாகவே வந்து வாக்களித்து வருகிறார்கள்.
அதுபோல் 8வது வார்டு முன்னாள் மேயர் மருதராஜ் மகனை எதிர்த்து திமுக சார்பில் ஆனந்த் போட்டி போடுவதால் அப்பகுதி பதட்டத்தில் இருந்து வருகிறது. இருந்தாலும் மக்கள் வந்து வாக்களித்து வருகிறார்கள். இந்த வாக்கு சாவடியில், கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தனது மனைவியுடன் வந்து வாக்கு பதிவு செய்தார். அதுபோல் அவரது மகனான பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார், மனைவியுடன் வந்து வாக்களித்து விட்டு சென்றார்.
வாக்களித்துவிட்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஐ.பெரியசாமி, “திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளிலும் திமுகவும் அதன் கூட்டணி கட்சியினரும் போட்டி போடுகின்றனர். இந்த 48 வார்டுகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். அதேபோல தமிழகம் முழுவதும் நடைபெற்றுவரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வேட்பாளர்கள் 100 சதவீத வெற்றியை பெறுவார்கள். இந்த வெற்றி முதல்வருக்கு அனைத்து திட்டங்களை நிறைவேற்ற உறுதுணையாக அமையும்” என்று கூறினார்.