திமுக துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி பெயரில், அவதூறு செய்தியைப் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக வழக்கறிஞர்கள் இன்று விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்தனர். இது தொடர்பாக விளக்கம் அளித்த திமுக வழக்கறிஞர் கல்பட்டுராஜா, “திமுக துணைப் பொதுச் செயலாளரும் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினருமான க.பொன்முடி, ஒரு சமுதாயத்தைப் பற்றி தவறாகக் குறிப்பிட்டதாக சில சமூக விரோதிகள், கடந்த 2 நாட்களாக வாட்ஸ் அப் மற்றும் முகநூல் வழியாக பொய்ச் செய்தியைப் பரப்பி வருகின்றனர். அந்தச் செய்தியில், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு ரத்து செய்யவேண்டும் என்றும் அந்தச் சமுதாய வாக்குகள் வேண்டாமென்று பொன்முடி கூறியதாகவும் பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றனர்.
இதுகுறித்து விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் புகழேந்தி சார்பாக திமுக வழக்கறிஞர்கள், இன்று விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், திமுக மீதும் திமுக துணைப் பொதுச்செயலாளர் மீதும் வதந்தி பரப்புவோர் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவைப் பெற்றுக்கொண்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், வதந்தி பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்” என்று தெரிவித்தார்.