தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஒன்றிய தலைவர் பதவியை திமுக கைப்பற்றியுள்ளது. உத்தமபாளையம் ஒன்றிய தலைவராக அதிமுகவைச் சேர்ந்த ஜான்சி இருந்தார் ஆனால் தலைவரின் செயல்பாட்டின் மீது அதிமுக திமுக உள்பட 10 கவுன்சிலர்களின் அதிருப்தியில் இருந்து வந்தனர்.
அதனடிப்படையில் தலைவர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்ததின் எதிரொலியாக ஒன்றியத் தலைவர் பதவியை ஜான்சி ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து கடந்த 8 மாதங்களாக துணைத் தலைவர் மூக்கம்மாள் தலைமையில் நிர்வாகம் நடந்து வந்தது. இந்தநிலையில் தான் தலைவர் தேர்வு நேற்று காலை ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடந்தது கலெக்டரின் நேர்முக உதவியாளர் தாமரைச்செல்வன் தேர்தல் அதிகாரியாக இருந்தார் பி.டி.ஓ.க்கள் ஜெயகாந்தன், செண்பகவள்ளி முன்னிலை வகித்தனர். ஆளுங்கட்சி கவுன்சிலர் இன்பென்ட் பனிமய ஜெப்ரின் தலைவர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்தார்.
அதைத்தொடர்ந்து கூட்டத்தில் திமுக கவுன்சிலர் 6 பேர் மட்டும் பங்கேற்றனர். அதிமுக கவுன்சிலர்கள் மற்றும் துணைத் தலைவர் மூக்கம்மாள் உட்பட மூன்று பேர் தேர்தலைப் புறக்கணிப்பதாகக் கூறி வெளியேற்றினர். முன்னாள் தலைவர் ஜான்சி கூட்டத்திற்கு வரவில்லை. வேறுயாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் திமுகவைச் சேர்ந்த இன்பென்ட் பனிமய ஜெப்ரின் ஒன்றிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அதிமுக வசமிருந்த ஒன்றிய தலைவர் பதவியை தேனி தெற்கு மாவட்டச் செயலாளரும், கம்பம் சட்டமன்ற உறுப்பினருமான கம்பம் ராமகிருஷ்ணன் முயற்சியால் திமுக கைப்பற்றியிருக்கிறது. அதைத்தொடர்ந்து ஒன்றிய தலைவரைச் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். அதில் நகர ஒன்றிய பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.