மத்தியில் ஆளும் பாஜக மோடி அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெறக்கோரி இந்தியா முழுக்க மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியான திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்ததோடு அச்சட்டத்தை திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்தி வருகிறது.
இன்று தமிழகம் முழுக்க மாவட்டத் தலைநகரங்களில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஈரோட்டில் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சு. முத்துசாமி தலைமையிலும் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் திருச்செங்கோடு எம்எல்ஏ மூர்த்தி தலைமையில் திருச்செங்கோட்டிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டு மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை உடனே திரும்பப் பெற வேண்டும், பாஜக அரசு மக்கள் விரோத அரசு அப்படிப்பட்ட மத்திய அரசுக்கு காவடி தூக்கி பினாமியாக செயல்படும் முதல்வர் எடப்பாடி அரசு அகற்றப்பட வேண்டும் என கோஷமிட்டனர்.