திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் 69- வது பிறந்தநாளையொட்டி, அக்கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர். பொதுமக்களுக்கு உணவு வழங்குவது, நலத்திட்ட உதவிகள் வழங்குவது, பேருந்து நிலையங்கள், வீடுகளுக்கு சென்று இனிப்பு வழங்குவது என தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் ஈடுப்பட்டு வருகின்றனர்.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. பெரிய அளவில் வெற்றி பெற்றது. முதலமைச்சரான பின்பு வரும் முதல் பிறந்தநாள் என்பது மு.க.ஸ்டாலினுக்கு கூடுதல் மகிழ்ச்சி. இந்த நிலையில், சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் வந்திருந்த முதலமைச்சருக்கு தி.மு.க.வின் தோழமைக் கட்சித் தலைவர்கள், தி.மு.க. தொண்டர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் அண்ணா அறிவாலயத்திற்கு சென்றிருந்தனர். தி.மு.க.வின் திருவண்ணமலை தெற்கு மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான எ.வ.வேலு, அவர்களை மேடைக்கு அழைத்து சென்று முதலமைச்சருக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்க வைத்தார்.
மறைந்த திமுக தலைவர் கலைஞர் பிறந்தாள், தற்போதைய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளின்போது, திருவண்ணாமலை நகரத்தைச் சேர்ந்த முன்னாள் நகர மன்ற தலைவர் ஸ்ரீதர் வித்தியாசமான முறையில் பிறந்தநாள் பரிசுகளைத் தந்து, அனைத்து மாவட்ட தி.மு.க.வினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்துவார். அதன் தொடர்ச்சியாக, இந்தாண்டு பிறந்தாளுக்கு இரண்டு வெள்ளி யானை சிலையை பிறந்தநாள் பரிசாக தனது ஆதரவாளர்களோடு சென்று தந்துள்ளார். நகர்ப்பு உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று யானைப் போன்று தன் வலிமையை வெளிப்படுத்தியதை தெரியப்படுத்தும் விதமாக யானையை பரிசாக தந்துள்ளார்.
இரண்டு யானைகளின் எடை மற்றும் அதன் விலைக் குறித்த தகவலை அத்தரப்பு ரகசியமாகவே வைத்துள்ளது. வெள்ளியால் செய்யப்பட்ட யானை சிலை சில லட்சங்கள் இருக்கும் என்கிறார்கள் விபரமறிந்த தி.மு.க.வினர்.