தமிழக முன்னாள் முதல்வரும், தி.மு.க. முன்னாள் தலைவருமான கலைஞரின் 97ஆவது பிறந்த தினமான ஜூன் 03ஆம் தேதியன்று, தி.மு.க.வினர் சிறப்பாகக் கொண்டாடினார்கள். தனது சமூகநீதித் திட்டங்களால் தமிழகத்தை நவீனப்படுத்தியவர் என்பதால், கலைஞரின் பிறந்த தினத்தில் பொதுமக்களும் கலந்துகொண்டனர். இதேநாளில், ஈரோட்டில் உள்ள கலைஞரின் சிலைமுன்பு காதல் ஜோடியொன்று திருமணம் செய்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேயுள்ள ராகராயன் குட்டையைச் சேர்ந்தவர் சந்திரகாந்த். இவரும் அத்தமாப்பேட்டையைச் சேர்ந்தவரான பிரிந்தியா தேவியும் நீண்ட காலமாகக் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் தான், கலைஞரின் பிறந்த தினத்தன்று, ஈரோட்டிலுள்ள அவரது சிலை முன்பு மாலைமாற்றி சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டனர்.
இந்தத் திருமணம் குறித்து மணமகன் சந்திரகாந்த் கூறுகையில், "நானும், பிரிந்தியா தேவியும் பள்ளிக் காலத்தில் இருந்து நல்ல நண்பர்களாகப் பழகி வந்தோம். பின் நாளடைவில் எங்களது நட்பு காதலானது. இருவரும் மனமொத்து திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம். சமூக நீதிக்காக இறுதி வரை போராடிய தலைவரான கலைஞர், உயிரோடு இருக்கும்போது, எங்களால் திருமணம் செய்துகொள்ள முடியவில்லை. ஆகவே, கலைஞரின் பிறந்ததினமான ஜூன் 03ஆம் தேதி, அவரது குருகுலமான ஈரோட்டில் உள்ள அவரது சிலை முன்பு மாலை மாற்றித் திருமணம் செய்து கொண்டோம்'' என்றார் மகிழ்ச்சியுடன்.