சேலம் அருகே, பொது இடத்தில் தி.மு.க.வினர் மக்கள் கிராமசபைக் கூட்டங்களை நடத்தக்கூடாது என்று காவல்துறையினர் திடீரென்று முட்டுக்கட்டை போட்டதால், கட்சியினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி, மாநிலம் முழுவதும் 16 ஆயிரம் கிராமங்களில் மக்கள் கிராமசபைக் கூட்டங்கள் வாயிலாக தேர்தல் பரப்புரைகளை மேற்கொள்ள தி.மு.க.வினருக்கு அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சேலம் கிழக்கு மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம் சார்பில் காரிப்பட்டி, உடையாப்பட்டி, ஏ.என்.மங்கலம், அனுப்பூர், மின்னாம்பள்ளி ஆகிய ஊர்களில் ஏற்கனவே மக்கள் கிராம சபைக்கூட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில், சேலத்தை அடுத்துள்ள வலசையூரில் புதன்கிழமை (டிச. 30) மக்கள் கிராம சபைக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் விஜயகுமார் தலைமையில் கட்சியினர் மும்முரமாக மேற்கொண்டு வந்தனர். காலை 08.00 மணியளவில், வலசையூர் பேருந்து நிறுத்தம் அருகே ஷாமியானா பந்தல், தரை விரிப்புகள், மைக் செட் கட்டும் பணிகள் நடந்தன.
அப்போது அங்கு வந்த வீராணம் காவல்துறையினர், பொது இடத்தில் கிராம சபைக்கூட்டம் நடத்த அனுமதி கிடையாது என்று திடீரென்று முட்டுக்கட்டை போட்டனர். மைக் செட் கட்டக்கூடாது என்றும் கறாராக கூறினர். அடுத்த ஒருமணி நேரத்தில் பொதுமக்கள் கிராமசபைக் கூட்டத்திற்கு வந்துவிடும் நிலையில், காவல்துறையினரின் திடீர் உத்தரவால், தி.மு.க.வினர் கடும் அதிருப்தி அடைந்தனர்.
ஒன்றிய பொறுப்பாளர் விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் விளக்கம் அளித்தும் காவல்துறையினர் ஏற்கவில்லை. இதனால் இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், ஷாமியான பந்தல், தரைவிரிப்புகள் போன்றவற்றை அகற்றும்வரை காவல்துறையினர் அங்கேயே நின்றுகொண்டிருந்தனர். இதையடுத்து, அதே பகுதியில் தனியார் ஒருவருக்குச் சொந்தமான இடத்தில் மக்கள் கிராமசபைக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி காலை 11.00 மணிக்கு மேல்தான் மக்கள் கிராமசபைக் கூட்டம் தொடங்கியது.
கூட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் சிலர், சாலை, சாக்கடைக் கால்வாய், தெருவிளக்கு, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகள் கடந்த பத்தாண்டுகளாக தீர்க்கப்படாமல் உள்ளது என்று குற்றம் சாட்டினர். மேலும் சிலர் கூறுகையில், தொட்டில் ஏரி பகுதியில் சாலை சீரமைக்கப்படாமல் உள்ளதாகவும், பல ஏக்கர் பரப்பளவுள்ள பஞ்சமி நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாகவும் அந்த நிலத்தை மீட்டுத்தர வேண்டும், என்றும் கோரிக்கை விடுத்தனர். சின்னனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் குடிநீர் வசதி செய்து தரவும், கழிப்பறைக்குத் தண்ணீர் வசதி வேண்டியும் புகார் மனு அளித்தனர்.
இந்த கிராமத்திலும் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை ஆகியவற்றை கோரி விண்ணப்பிக்கும் பலருக்கு கிடைப்பதில்லை என்றும் அதிருப்தியுடன் கூறினர். கடந்த தி.மு.க. ஆட்சியின்போது திறக்கப்பட்ட ஊர்ப்புற நூலகத்தை, அ.தி.மு.க. ஆட்சி வந்த பிறகு மூடப்பட்டு விட்டதாகவும் கூறினர்.
இது தொடர்பாக விஜயகுமார் கூறுகையில், ''அ.தி.மு.க. ஆட்சியில், கிராமப்புற பகுதிகளில் கடந்த பத்தாண்டுகளாக எந்த ஒரு வளர்ச்சித் திட்டப்பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை தி.மு.க. நடத்தி வரும் கிராமசபைக் கூட்டங்கள் வாயிலாக மக்கள் வெட்டவெளிச்சம் போட்டுக் காட்டி வருகின்றனர். இதையெல்லாம் ஆளுங்கட்சியினரால் பொறுத்துக்கொள்ள முடியாமல்தான், காவல்துறை மூலம் எங்களுக்கு பல்வேறு இடையூறுகளை அளிக்கின்றனர்.
அயோத்தியாப்பட்டணம் ஒன்றியக்குழு துணைத்தலைவர் புவனேஸ்வரி செந்தில்குமார் ஒரு மக்கள் பிரதிநிதியாக கிராம மக்களைச் சந்தித்துக் குறைகளை கேட்பதில் எந்த விதிமீறலும் கிடையாது. அதைத்தான் நாங்கள் செய்கிறோம். ஆனால், காவல்துறையினர் பாரபட்சமாக, உள்நோக்கத்துடன் தி.மு.க.வினர் நடத்தும் கூட்டங்களுக்குத் தடை போடுவது கண்டிக்கத்தக்கது,'' என்றார்.
அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய முன்னாள் தி.மு.க. செயலாளர் முத்து, பொருளாளர் வெங்கட்ராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் செந்தில், பாரதி ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு, வீடு வீடாகச்சென்று தி.மு.க.வுக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.