கோவையில் உள்ள கண்ணம்பாளையம் பகுதியில் பான் மசாலா, குட்கா தொழிற்சாலை முன்பு போராட்டம் நடத்திய கார்த்திக் எம்.எல்.ஏ உட்பட திமுகவினர் 10 பேர் மீது போலிசார் வழக்குபதிவு செய்தனர்.
சூலூர் பகுதியில் உள்ள கண்ணம்பாளையத்தில் ஒரு தனியார் குடோனில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா, பான்பராக் மற்றும் போதை தரும் குட்கா உற்பத்தி செய்யும் மிகப் பெரிய தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது. இதில், கோவை மாவட்ட கண்காணிப்பாளர் மூர்த்தி தலைமையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு போலீஸார் அந்த ஆலையில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, 650 கிலோ எடை கொண்ட புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் 450 கிலோ மூலப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் ஆலையில் பணியாற்றிவந்த ரகுராமன், அஜய், ராம்தேவ், சோஜிராம் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர். ஆலையை நடத்திவந்த அமித்ஜெயின் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், குட்கா விவகாரத்திற்கு எதிராக கோவை தி.மு.க-வினர் சோதனை நடைபெற்ற தொழிற்சாலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க-வினர் மீது சூலூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொதுஇடத்தில் கூடுதல், அனுமதியின்றி போராட்டம் நடத்துதல், அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, கண்ணம்பாளையம் முன்னாள் தலைவர் தளபதி முருகேசன், ஒன்றிய செயலாளர் செல்வராஜ், சண்முகம், சுரேஷ் உள்ளிட்ட 7 பேரை போலீஸார் நள்ளிரவில் கைது செய்தனர். மேலும், எம்.எல்.ஏ கார்த்தியையும் கைது செய்ய போலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆனால், கார்த்தி எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. தற்போது 7 நபர்களை மட்டும் கோவை புளியகுளம் நீதிபதி இல்லத்தில் ஆஜர்படுத்தினர்.
நீதிபதி வேடியப்பன் 15-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கைகள் தொடர்பாக கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தமிழ் மணி கூறியதாவது: குட்கா விவகாரத்தை மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல போராட்டம் நடத்திய போது கைது செய்யாமல் இன்று வழக்கு பதிவு செய்வது கண்டனத்துறியது. இன்று இவர்களை கைது செய்ய என்ன சூழல் உள்ளது? வேண்டும் என்றே பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. நாங்கள் எங்கள் தலைமைக்கு தகவல் கொடுத்துள்ளோம். அடுத்து தலைமையின் முடிவை எதிர்பார்த்து இருக்கிறோம் என்றார்.