திருச்சி மாநகராட்சி பகுதியில் காவிரிக் கரையோரம் ஓயாமாரி, உறையூர் கோணக்கரை, கருமண்டபம் ஆகிய 3 இடங்களில் மின் மயானங்கள் உள்ளன. இங்கு, எரிவாயு மூலம் உடல் தகனம் செய்யப்படுகிறது. குறிப்பாக, காவிரிக் கரையோரம் உள்ள திருச்சி ஓயாமாரி சுடுகாட்டில் ஓயாமல் சடலங்கள் வருவதால் இதற்கு ஓயாமாரி என்று பெயர் வந்ததாக கூறுவர்.
திருச்சி மாநகரத்தின் பெரும்பாலான பகுதிகளிலிருந்து வரும் பிணங்களை எரிக்கும், புதைக்கும் சுடுகாடாக ஓயாமரி இருக்கிறது. இங்குள்ள எரிவாயு தகன மேடையைப் பராமரிக்கும் பணியைத் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று மேற்கொண்டுவருகிறது. தற்போது கரோனா நோயாளிகள் இறப்பு காரணமாக தினமும் 10-க்கும் மேற்பட்ட உடல்கள் அங்கு கொண்டுவரப்படுகின்றன.
மின்சார தகன மேடையில் பிணங்களை எரிப்பதற்கு தாமதம் ஏற்படுகிறது. மேலும் பிணங்களைக் கொண்டுவரும் உறவினர்களுக்கு கழிவறை உள்ளிட்ட குறைபாடுகள் உள்ளதாக புகார் எழுந்தன. அதைத் தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ், இன்று (20.05.2021) அப்பகுதிக்கு வந்து ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்ட அதிகாரிகளும் அங்கு வந்தனர். மின்சார தகன மேடையில் பணியாற்றும் தொண்டு நிறுவன பணியாளர்களின் சேவையைக் கேட்டறிந்த எம்.எல்.ஏ., அவர்களைக் கவுரவிக்கும் வகையில் சால்வை அணிவித்தார். தொடர்ந்து சுடுகாட்டில் நடமாடும் கழிவறையை உடனடியாக ஏற்படுத்திக்கொடுக்க மாநகராட்சி அதிகாரிகளிடம் அவர் கேட்டுக்கொண்டார். அத்துடன் பிணங்களைத் தாமதமின்றி எரியூட்டி அவர்களின் உறவினரிடம் சாம்பலை ஒப்படைக்கவும் கேட்டுக்கொண்டார்.