போக்குவரத்துறை முறைகேடு வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். குற்றச்சாட்டு பதிவிற்காக மார்ச் 3-ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2011 முதல் 2015 வரை, அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தார். அப்போது போக்குவரத்து துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இவ்வழக்கு, எழும்பூரில் உள்ள மத்திய குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் வழக்கு, எம்.பி. எம்.எல்.ஏ. க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரமேஷ் முன்பு செந்தில் பாலாஜி ஆஜரானார். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டு பதிவிற்காக மார்ச் 3-ம் ஒத்திவைத்ததோடு செந்தில் பாலாஜியுடன் அன்னராஜ், பிரபுவும் ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.