சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் சந்தித்தார். அப்போது, அ.தி.மு.க. அமைச்சர்கள் மீதான 39 பக்கங்களைக் கொண்ட இரண்டாம் கட்ட ஊழல் புகார் பட்டியலை ஆளுநரிடம் வழங்கினார். இந்தச் சந்திப்பின் போது, தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, தி.மு.க. கட்சியின் பொருளாளரும், அக்கட்சியின் மக்களவை குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகன், "அரசியல் சட்டத்துக்குட்பட்டு தனக்குள்ள அதிகாரத்தின் படி நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் கூறினார். ஐந்து அமைச்சர்கள், ஒரு எம்.எல்.ஏ. மீது ஆதாரத்துடன் 9 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. தி.மு.க. சார்பில் ஏற்கனவே தந்த புகாரை உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி இருப்பதாக ஆளுநர் தெரிவித்தார். தி.மு.க. முதலில் தந்த புகார் பட்டியலைப் படித்துக் கொண்டிருப்பதாகவும் ஆளுநர் தெரிவித்தார்" இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22- ஆம் தேதி அன்று 8 அமைச்சர்கள் மீது முதற்கட்டமாக, ஆளுநரிடம் தி.மு.க. புகார் மனு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.