நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.