சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. கட்சியின் தலைமை அலுவலகத்தில் தே.மு.தி.க. கட்சியின் நிறுவனத்தலைவரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தே.மு.தி.க.வின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணைச்செயலாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அடுத்தாண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தல் குறித்தும் கூட்டணியுடன் போட்டியிடுவதா? (அல்லது) தனித்து போட்டியிடுவதா? என்பது குறித்தும் நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கூட்டத்தில் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை உடனே மூட வேண்டும். பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை உடனே குறைக்க வேண்டுமென மத்திய அரசை தே.மு.தி.க. வலியுறுத்துகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக பந்து வீசிய தமிழக வீரர் நடராஜனுக்கு பாராட்டு உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், "ஜனவரி மாதத்தில் பொதுக்குழு, செயற்குழுவைக் கூட்டி யாருடன் தேர்தல் கூட்டணி என்பதை விஜயகாந்த் அறிவிப்பார். வருகிற தேர்தல் தமிழகத்தின் முக்கியமான தேர்தல்; தே.மு.தி.க. தேர்தல் பணியைத் தொடங்கிவிட்டது. மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வார்" என்றார்.