நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சூழலில் நுரையீரல் பாதிப்புக்காக கடந்த நவம்பர் மாதம் 18 ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதேசமயம் விஜயகாந்த் பூரண குணமடைய தொண்டர்கள், ரசிகர்கள் எனப் பலரும் பிரார்த்தனை செய்தனர்.
இதனையடுத்து விஜயகாந்த் பூரண குணமடைந்து கடந்த 11 ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாக மருத்துவமனை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கலந்துகொண்டார். இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக மீண்டும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூத்த மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
அதில், தற்போது விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தேமுதிக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மருத்துவ பரிசோதனையில், விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.