
தமிழகத்தில் பல்வேறு மாவட்ட ஆட்சியர்களை தமிழக அரசு பணியிட மாற்றம் செய்திருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பை தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ளார்.
தூத்துக்குடி, நெல்லை, திருவண்ணாமலை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், சந்தீப் நந்தூரி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி ஆட்சியராக செந்தில்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி குறைதீர்ப்பு சிறப்பு அதிகாரியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்ட ஆட்சியராக விஷ்ணு நியமிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட ஆட்சியராக மதுசூதனன் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக இயக்குனர் மற்றும் வேளாண் இயக்குனராக ஜெயகாந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் ஆட்சியராக தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நியமிக்கப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக கிளாஸ்டோன் புஷ்பராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.