தொற்று உறுதியான 13 பேரின் ஆய்வு முடிவுகள் வந்த பிறகே உருமாறிய கரோனாவா என்பது குறித்து தெரியவரும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் டிசம்பர் 31- ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (28/12/2020) காலை ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் துணை முதல்வர், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறையைச் சேர்ந்த அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "கரோனா தடுப்பு பணிகளுக்காக இதுவரை ரூபாய் 7,544 கோடி செலவிடப்பட்டுள்ளது. பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்தவர்களில் 13 பேருக்கு கரோனா உறுதிச் செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியான 13 பேரின் மாதிரிகள் புனே ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. புனேவில் இருந்து முடிவுகள் வந்த பிறகே, உருமாறிய கரோனாவா என்பது தெரிய வரும். மருத்துவ நிபுணர்களுடன் 13 முறை ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. தலைமைச் செயலாளர் தலைமையில் 14 முறை மாவட்ட ஆட்சியர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டந்தோறும் தடுப்பு வழிமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டதால் கரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. கரோனா பாதிப்பு குறைந்ததன் காரணமாக படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்படுகின்றன. புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகள் வருவதால் தொடர் கண்காணிப்பை மாவட்ட நிர்வாகங்கள் செயல்படுத்த வேண்டும். நோய்த்தொற்று குறைந்து வருவதால் மக்கள் முகக்கவசம் அணிவதைத் தவிர்த்து வருகின்றனர். அரசு அறிவிக்கும் வழிமுறைகளைப் பொதுமக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.